நீதிபதி சரவணராஜா பதவி விலகலும் கற்க வேண்டிய பாடங்களும்
நீதி நேர்மை வழி வாழும் வாழ்வு தர்ம நெறியின்பாலானது என்று போதிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிந்திக்க வேண்டியது, அந்த நீதியும் நேர்மையும் எப்படி கையாளப்படுகின்றன என்பதையாகும்.
எந்தவொரு முரண்பாட்டுக்கும் நீதிமன்றத்தையும் சட்ட உதவியையும் நாடுதலே சரி என்பது நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலினால் தவறாகிப்போகிறது.
பொருத்தமான நீதி வழங்கலில்லாத ஒரு நீதி நிர்வாகவியல் ஆட்சியில், நீதி கேட்டு நீதிமன்றம் செல்வது என்பது கானல் நீர் போன்றது. தோற்றம் மட்டுமே நீதி பேணப்படுவதாக இருக்கும். ஆனால் அங்கு எதுவும் இருப்பதில்லை.
நீதி வழங்கிய நீதிபதியினாலேயே நீதி வழிச் சட்டங்களின் உதவியை நாட முடியாத சூழல் உள்ள போது, சாதாரண மக்களால் சட்டவிதிகளை நாட முடிவதிலுள்ள மிகப்பெரிய சவால்களை இந்த நிகழ்வின் மூலம் இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
உளவியல் தாக்கம்
உரிய சட்டமுறைகள் இருக்கின்ற போதும் அதனை நாடுவதில் நாட்டமின்மையை ஏற்படுத்தி ஒருவரை சிக்கல் நிலைக்கு தள்ளிவிட்டு அவரைக் குற்றம் சாட்டுவது மிகப்பெரிய குற்றமாக கருதவேண்டும்.
மனிதருள் மனவுளைச்சலை ஏற்படுத்தவல்ல செயல்கள் தான். அவர்களால் இழைக்கப்படும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு அவை காரணமாகிப் போகின்றன.
அமைதியான மன நிலை இல்லாமல் இருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமான முடிவுகளை எடுப்பதில் தவறு விடுதல் இயல்பானது.
பல வழக்குகளுக்கு நீதியின் பால் தீர்ப்பு வழங்கிய போதும் தனக்கேற்பட்ட அச்சுறுத்தலுக்கு உரிய தீர்வினை பெற முடியாத சூழலை நன்கு அவதானித்து தான் பதவி விலகல் முடிவினை எடுத்திருக்க வேண்டும்.
யாரிடம் இருந்து உயிர் அச்சுறுத்தல்
ஒரு நீதிபதி உயிர் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றார் என்றால் சட்ட உதவியை நாடியிருக்கலாம். பொலிஸாரிடம் முறைப்பாட்டை செய்திருக்கலாம். எனினும் நீதிபதி சரவணராஜாவிற்கு யாரிடம் இருந்து உயிர் அச்சுறுத்தல் வந்திருந்தது என்பதை இங்கே நோக்க வேண்டும்.
அத்துடன் குருந்தூர் மலையில் நடைபெறும் நீதிமன்ற தீர்ப்புகளை புறக்கணித்த செயற்பாடுகள் தொடர்பிலான நீதிமன்ற கட்டளைகளை மாற்றுமாறு அவருக்கு யார் அழுத்தம் கொடுத்தார்கள்?
இந்த இரண்டு வகையான சட்ட முரணான செயற்பாட்டு அழுத்தங்களும் ஆட்சியாளர்களல்லாத வேறொரு பிரிவினரிடம் இருந்து நீதிபதிக்கு கிடைத்திருந்தால் மட்டுமே அவரால் சட்ட உதவியையோ அன்றி தனக்கான பாதுகாப்பையோ கோரியிருக்க முடியும்.
மாறாக ஆட்சியாளராகவோ அல்லது ஆட்சிப் பங்குதாரராகவோ இருந்திருந்தால் அவர்களிடம் சட்ட உதவியையோ பாதுகாப்பையோ கோருவது என்பது சுவரில் நாமே நம் தலையை மோதிக் கொள்வதற்கு சமமாகும்.
ஒரு நீதிபதி என்பவர் சுயமாக முடிவுகளை எடுத்துக்கொள்ளும் ஆளுமைமிக்கவராக இருக்க வேண்டும். அந்த வகையில் நீதிபதி சரவணராஜா அவர்களின் இந்த தற்சார்பான முடிவு அவரை சிறந்த ஆளுமைமிக்க நீதிபதி என்பதை நிறுவிப்பதோடு அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வகையில் நடத்தப்பட்டார் என்பது திண்ணம்.
உச்ச நீதிமன்றத்தை ஏன் நாடவில்லை
நீதிபதி சரவணராஜா பதவி விலகலையடுத்து பல சட்டவல்லுனர்களும் அரசியலாளர்களும் பொது மக்களும் என கருத்துத் தெரிவிப்பதும் எதிர்ப்புத் தெரிவிப்பதுமாக இருப்பதோடு சிறிலங்கா அரசு மீது தங்கள் நம்பிக்கையீனத்தையும் தொடர்ந்து வெளிக்காட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.
இலங்கை அரசு தமிழர் மீது மேற்கொண்ட எந்தவொரு அடக்குமுறைக்கும் நீதியின் பாலோ அன்றி மனிதபிமானமாகவோ எத்தகைய பதிலளிப்புக்களையும் செய்யவில்லை.
அதற்கான பரிகாரமும் தேடவில்லை. அப்படியிருக்க நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலுக்கு மட்டும் பொறுப்புச் சுமந்து தீர்வினை கொடுத்து விடும் என எதிர்பார்ப்பது இலவம் காய் பார்த்து காத்திருந்ந கிளியின் நிலையாகக் தான் தமிழரின் நிலை இருந்து விடப்போகிறது.
கடந்த காலங்களில் சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு நம்பிக்கை தந்துவிடும்படி நடந்திருந்தாலும் கூட தமிழர்கள் இப்போது தங்கள் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துவது பொருத்தப்பாடானதாக இருந்திருக்கும்.
இப்போதுள்ள ஒரே கேள்வி நீதிபதி சரவணராஜா அவர்களின் பதவி விலகலுக்கான காரணங்களை ஆராய்வதோடு அது போல் இனியொரு சூழல் தோன்றாதிருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காது இருப்பது ஏன்? உச்ச நீதிமன்றம் மற்றும் சிறப்பு உச்ச நீதிமன்றங்களில் முறையிடுவதற்கான சாத்தியப்பாடுகள் தேடி அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசின் நீதித்துறை மீதுள்ள குறைபாடுகளை பொதுத் தன்மையற்ற நீதி வழங்கல் போக்குகளை களைந்து கொள்ள முடியும்.
இங்குநீதி கிடைக்காத போது சர்வதேசப் பரப்பில் உள்ளக நீதிப் பொறி முறைகளில் தமிழருக்குள்ள நம்பிக்கையீனத்தை எடுத்துக்காட்டும் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துவிடும்.
இவ்வாறு போர்க்குற்ற மீறல்களை சர்வதேச நீதிமன்றங்களில் விசாரிப்பதற்கான போராட்டத்திற்கு இது வலுச்சேர்க்கும். நீதி கிடைத்து விட்டால் உள்ளக நீதிப் பொறி முறைகளினூடாக நில ஆக்கிரமிப்பு மற்றும் தமிழருக்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த நீதித்துறை உதவியாக இருக்கும்.
அது மட்டுமல்லாது ஆட்கொணர்வு மனுக்கள் மூலம் காணாமல் போன உறவுகளை தேடுவதிலும் நீதித்துறையை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இங்கே இப்போது தமிழர்கள் மிகச் சரியாக தங்கள் நகர்வுகளை முன்னெடுப்பார்களானால் வெற்றி மட்டுமே அவர்களுக்கு மிச்சமாக கிடைக்கும்.
நீதி தோற்ற போது மாகாண சபையின் நிலை?
நீதித்துறை சரிவர இல்லாத போது எப்படி மாகாணசபை முறைமை வெற்றியளிக்கும்? மாகாண சபை முறைமையானது மத்திய அரசையும் மற்றும் மாகாண அரசையும் இரு நிறுவனங்களாக கருதப்பட்டு அவற்றின் செயற்பாடுகள் வரையறுக்கப்பட்ட சட்டங்களினூடாக கட்டுப்படுத்தப்படும்.
ஒன்றின் மீது ஒன்றின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் போது இரு தரப்பும் தங்களுக்கான வரையறைகளை மதித்து பேணி நடக்க வேண்டும்.
இப்போது நீதிபதி விடயத்தில் நீதியை பேணமுடியாத நீதித் துறையும் நீதிபதியை அவதூறாக விமர்சிக்கும் பாராளுமன்றமும் உள்ள போது இந்த இயல்பு தொடரும் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முன்மொழியப்படும் மாகாணசபை முறை தோற்றுப் போய்விடும்.
இந்த முறைமை விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக் வேண்டும். நிலையில்லாத எந்தவொரு தீர்வுத் திட்டங்களையும் அவர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள முற்பட்டதில்லை.
விடுதலைப்புலிகளின் தலைவரது தீர்க்கதரிசனம் மிக்க சில முடிவுகள் காலத்துக்கு காலம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த போதும் இன்று அவை நிதர்சனமாகின்ற போது அவை பற்றி அன்றே சரியான நோக்குகளை மேற்கொண்டிருந்தால் இலங்கையின் இன்றைய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது.
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் என்ற இந்த ஒற்றை நிகழ்வை தமிழர்கள் தங்கள் எதிர்காலத் திட்டமிடலின் ஒரு திசை திருப்பியாக்கி நடைபோடலாம்.