சிங்கப்பூருக்கு விஜயம் செய்த நீதியமைச்சர்:அர்ஜூன் மகேந்திரன் பற்றி எதுவும் பேசப்படவில்லை
இலங்கை நீதியமைச்சர் அலி சப்றி, ஒரு வாரத்திற்கு முன்னர், சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகத்தின் அழைப்பு அமைய அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இதன் போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் சட்ட ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
எனினும் சிங்கப்பூரில் தங்கி இருக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பான எவ்வித பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.
நீதியமைச்சர் அலி சப்றியின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தின் அழைப்புக்கு அமைய கடந்த 13 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை இலங்கை நீதியமைச்சர் உயர் மட்டப் பிரதிநிதிகளுடன் சிங்கப்பபூருக்கு விஜயம் செய்தார்.
நீதியமைச்சர் இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்தை சந்தித்து இரு நாடுகளின் சட்டத்துறை சம்பந்தமாக ஒத்துழைப்புகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினர்.
இந்த விஜயத்திற்கான அழைப்பு மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கு வழங்கிய உபசரிப்பு தொடர்பில் நீதியமைச்சர் அலி சப்றி, சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார் என உயர்ஸ்தானிகராலயம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறிய பிணை முறி மோசடி தொடர்பில், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வந்து விசாரணைகளை நடத்த போவதாக கூறியிருந்தது.
அத்துடன் இந்த பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது. எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்த விடயம் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அத்துடன் மலேசியாவில் இருந்து கே.பியை கொண்டு வந்தது போல் அர்ஜூன் மகேந்திரனை கொண்டு வரப் போவதாக அன்று எதிர்க்கட்சியில் இருந்து உதய கம்மன்பில கூறியிருந்தார்.
இவ்வாறான நிலைமையில், நீதியமைச்சர் அலி சப்றி சிங்கப்பூருக்கு விஜயம் செய்திருந்தும், அவர் அர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் நடத்தாமல் திரும்பியுள்ளார்.



