வெலிக்கடை சிறைச்சாலை கலவர வழக்கின் தீர்ப்பு இன்று
புதிய இணைப்பு
வெலிக்கடை சிறைச்சாலையில் எட்டு கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று 11 மணியளவில் குறித்த வழக்குக்கான தீர்ப்பை வழங்கவிருந்த நிலையில், குறித்த வழக்குக்கான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வெலிக்கடை சிறைச்சாலையில் எட்டு கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (06) அறிவிக்கப்படவுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தொடரப்பட்டது.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சிறைச்சாலைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்ட போதிலும், சட்டமா அதிபரி 8 கைதிகள் கொல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் மட்டுமே கிடைத்த நிலையில் இவ் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், நீதியரசர்களான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று இவ் வழக்குக்கான தீர்ப்பை வழங்கவுள்ளது.
நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, முன்னாள் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரி இந்திக்க சம்பத்தும் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த போதும், அவர் அப்போது வெளிநாட்டில் இருந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலையாகாது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அரசுத் தரப்பு சாட்சியப் பரீட்சை முடிந்ததும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதிகள் குழாம் தெரிவித்திருந்மை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவ் வழக்குக்காக தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam
