பாதுகாப்பு தரப்பு மற்றும் பொலிஸாரினால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்: மட்டு.ஊடக அமையம் கண்டனம்
கொழும்பில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின்போது பாதுகாப்பு தரப்பு மற்றும் பொலிஸாரினால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'போராட்டங்களின்போது ஊடகவியலாளர்களை பாதுகாக்கவேண்டியவர்களே அவர்கள் மீது தாக்குதல் நடாத்தியமை என்பது இந்த நாட்டில் ஊடகத்துறையினரின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தியுள்ளது.
காழ்ப்புணர்ச்சி
மக்கள் எழுச்சி போராட்டத்தின்போது நேற்யை தினம் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிந்து ஊடக அடையாள அட்டைகளை கழுத்தில் அணிந்திருந்த நிலையிலும் அவற்றினை கருத்தில்கொள்ளாது அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமையானது பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸாரும் ஊடகவியலாளர்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துவதுடன் இதனை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே எமது அமைப்பு நோக்குகின்றது.
இந்த நிலையில் பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸாரும் சட்டத்தினை தமது கையிலெடுத்து ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சர்வதேச ஊடக அமைப்புகளும் இலங்கையில் செயற்படும் அமைப்புகளும் முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைக்கின்றோம்.
இந்த நாட்டில் கடந்த காலங்களில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறான தரப்பினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை விடுத்துவந்த நிலையில் இன்று மக்கள் முன்பாகவே ஊடகவியலாளர்கள் தாக்குதல் நடாத்தப்பட்டமை குறித்தும் இந்த நாட்டில் செயற்படும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அரசாங்க ஊடக நிறுவனங்களை தாக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் |



