முல்லைத்தீவு பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை அறிக்கையிடுவதற்காக
சென்றிருந்த ஊடகவியலாளர் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள 'கோத்தபாய கடற்படை கப்பல்' என்னும் கடற்படை முகாமிற்கு காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு நில அளவை திணைக்களத்தினரால் இன்று(7) மேற்கொள்ளப்பட்ட முயற்சியை எதிர்த்து காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.
இதனை செய்தி அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனின் கடமைக்கு முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களால் இடையூறு மேற்கொள்ளப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்
மக்கள் போராட்டம் மேற்கொண்ட இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரை நோக்கி வந்த கடற்படை அதிகாரி இங்கு புகைப்படம் எடுக்கமுடியாது என அச்சுறுத்தியதோடு பொலிஸாரை அழைத்து இவரது ஊடக அடையாள அட்டைய பரிசோதியுங்கள் என கட்டளையிட்டதோடு இவரை கைது செய்யுமாறும் கூறியுள்ளார்.
இதனால் அப்பகுதியில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் ஊடகவியலாளர் குமணனை கைகளால் கோர்த்து தடுத்து வைத்திருந்து ஊடக அடையாள அட்டையை காண்பிக்குமாறு வற்புறுத்தியதோடு கைத்தொலைபேசியில் ஊடக அடையாள அட்டையை புகைப்படம் எடுத்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
இதேவேளை கடற்படையினரோடு இணைந்து சிவில் உடையில் நின்ற சிலர் போராட்டக்காரர்களையும் ஊடகவியலார்களையும் புகைப்படம் எடுத்த போதிலும் பொலிஸார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
கடற்படை முகாமிற்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி: மக்கள் போராட்டம்(Photo) |



