சமுதித சமரவிக்ரமவை இலக்கு வைத்து தாக்குதல்! - வலுப்பெறும் கண்டன அறிக்கைகள் (Video)
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு வந்த ஆயுதம் தாங்கிய குழுவொன்று அவரை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வெள்ளை வானில் வந்த ஆயுதம் தாங்கிய மூவர் பிலியந்தலையில் உள்ள சமுதிதாவின் வீட்டில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதிக்குள் இன்று (14) அதிகாலை 2.00 மணியளவில் நுழைந்து பாதுகாப்பு அதிகாரியை நோக்கி துப்பாக்கியை காட்டி வீட்டுக்குள் நுழைய முயன்றதுடன் பின்னர் வீட்டின் மீது கற்களை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விரைவான விசாரணைக்கு ஊடகத்துறை அமைச்சர் உத்தரவு
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது வெள்ளை வானில் வந்த
ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத்
துரிதப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும
அறிவுறுத்தியுள்ளார்.
இன்று அதிகாலை வந்த ஆயுததாரிகள் தனது வீட்டின் மீது கற்கள் மற்றும் கழிவுகள் அடங்கிய பொதிகளை வீசி தாக்கினர் என்று சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல தடவைகள் துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்கிஸை பொலிஸ் நிலையத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் 3 பொலிஸ் குழுக்கள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கத்தோலிக்க சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி கண்டனம்
தென்னிலங்கையின் குடிசார் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் அத்துடன் தென்னிலங்கையின் பிரபல சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை கத்தோலிக்க சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இந்த இரு சம்பவங்களையும் நாம் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள செஹான் மாலக உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்வர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறு நீதியை நிலைநாட்டும் நிறுவனங்களுக்கும், அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தெரிவித்திருந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் கைது செய்யப்படடுள்ளார்.
இதற்கமைய செஹான் மாலக கமகே இன்று கொழும்பை அண்மித்த பாணந்துறை பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னிலங்கையின் பிரபல சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டு வளாக காவலாளிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி வளாகத்திற்குள் நுழைந்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிலியந்தல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை வான்னொன்றில் வந்த நால்வரால் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கல்கிஸை பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ் 3 விசேட காவல்துறை குழுக்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாக அதனை செய்வதைவிடுத்து இவ்வாறான அடக்குமுறையின் ஊடாக மக்களின் இதயத்தில் இருக்கும் வெறுப்பையும் சோகத்தையும் தடுக்க முடியாது.
இந்த நாடு ஏகாதிபத்தியத்தை நோக்கி பயணிக்கிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. ஜனநாயகத்தை இல்லாதொழித்து, மக்களின் உரிமைமைய இல்லாதொழித்து தமக்குத் தேவையானவற்றை மாத்திரம் செய்ய முடியுமாயின், ஏகாதிபத்தியத்தை நோக்கி பயணிக்கிறது என்பதையே காட்டுகிறது.
ஊடகவிலாளர் சமுதித்தவின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் பல விடயங்களை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்திய நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஊடகவியலாளருக்கு இன்று சுதந்திரமாக செயற்பட முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் அடிப்படையான ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்களையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அந்தச் சங்கத்தால் இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு மீது ஆயுதம் தாங்கிய நபர்களால், பெப்ரவரி 14ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு இவ்வாறு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்களைப் பாதுகாப்பதே இத்தகைய தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவாகின்றது.
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ‘கறுப்பு ஜனவரி’ நினைவுகூரப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்குள் இத்தகையதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை ஊடக சமூகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.
ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகக் கடந்த காலங்களில் குற்றங்கள் இழைத்தவர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், சுதந்திரமாக உலா வருவதும் இப்படியான தாக்குதலுக்கு ஆசீர்வாதமாக அமைவதாக எமது சங்கம் கருதுகின்றது.
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சமுதித சமரவிக்ரமவின் ஊடகப் பணி தொடர்பில் ஏதேனும் தரப்பினருக்குப் பிரச்சினை இருப்பின், அது தொடர்பில் நாட்டின் சட்டத்துக்கு அமைவாக உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய வேண்டும். அதைவிடுத்து ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய கோழைத்தனமான தாக்குதலை எமது சங்கம் வன்மையாகக் கண்டிகின்றது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இலங்கையிலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகைள மேற்கொள்ள எமது சங்கம் தயங்காது எனவும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து வெளிப்படையான விசாரணை வேண்டும் - சஜித்
"சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஓர் இழிவான தாக்குதலுக்கு இணையானதாக வெறுப்புடன் நாங்கள் கண்டிக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடன் இணைந்து அவரது வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை, இவ்விடயத்தில் அவருக்கு எமது மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவிக்க விரும்புகின்றோம் என்பதோடு அவருக்குத் தேவைப்படும் உதவிகளை தயக்கமின்றி வழங்குவோம் என்றும் குறிப்பிடுகிறோம்.
அவமானகரமான குண்டர் குழுவின் தாக்குதல் குறித்து வெளிப்படையாக, பாரபட்சமற்ற, நியாயமான விசாரணையை நடத்தி, இதனுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
கருத்துச் சுதந்திரமானது அனைவரதும் உரிமையாகும் என உலக மனித உரிமைகள் பிரகடனம் மூலமும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனம் மூலமும், மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய பிரகடனம் மூலமும் எங்கள் நாட்டு அரசியல் யாப்பின் மூலமும் மிகத் தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, அது எவ்வாறான சூழ்நிலையிலும் புறக்கணிக்கப்பட முடியாது என்பதும் அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
ஊடக சுதந்திரம் என்பதால் கருதப்படுவது யாதெனில் விமர்சிப்பது மற்றும் அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பதற்குள்ள சுதந்திரத்தையாகும் என ஜோஜ் ஓவல் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் நான்காவது அரசாகக் கருதப்படும் ஊடகங்கள் அல்லது ஊடகவியலாளர்கள் மீது எந்தவிதமான தணிக்கையையும் விதிக்க முடியாது.
விதிக்க முடியுமான ஒரே ஒரு தணிக்கையானது சுய தணிக்கையாகும் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கும் இது பொருந்தும் என்பதால் ஊடக சுதந்திரத்துக்காகப் போராடும் அனைவருடனும் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி நாம் அவர்களுடன் கைகோர்க்கின்றோம் என்பதைக் கூறிக்கொள்கின்றேன் எனவும் -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மர்மநபர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் சமுதித்தவின் வீட்டிற்கு சென்ற மனோ கணேசன்(Video)
ஊடகவியலாளர் சமுதிதவின் வீட்டின் மீது தாக்குதல்: வெளியானது சிசிடீவி காணொளி (VIDEO)