மர்மநபர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் சமுதித்தவின் வீட்டிற்கு சென்ற மனோ கணேசன்(Video)
மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் பிலியந்தலையில் அமைந்துள்ள வீட்டிற்குப் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், காவிந்த ஜயவர்தன, கயந்த கருணாதிலக மற்றும் ஜே.வி.பி யின் முன்னாள் எம்.பி நளின் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டு வளாக காவலாளிகளைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி வளாகத்திற்குள் நுழைந்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிலியந்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை வானொன்றில் வந்த நால்வரால் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பிலியந்தல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன.
வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் முகத்தை முழுவதுமாக மூடிக்கொண்டு உள்ளே நுழைந்தது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் , பல தடவைகள் தொலைபேசி ஊடாகவும் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் , சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று காலை இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்,கல்கிசை காவல்நிலையத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை
அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ் 3 காவல்துறை குழுக்கள் இது தொடர்பான
விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
