தையிட்டி ஆர்ப்பாட்டத்தில் கைதானவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு
தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை தொடர்பாக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று(05.01.2026) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே வழக்கினை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்தியபோது வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், அவர்கள் சொந்தப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கெள்ளப்பட்டது.
இதன்போது, வேலன் சுவாமிகள் உள்ளிட்டோருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி ஸ்ரீகாந்தா உள்ளிட்டோர் முன்னிலையாகியிருந்தனர்.
இதனையடுத்து, அமைதி வழி போராட்டங்களுக்கு இலங்கை அரசியலமைப்பிலும், தீர்க்கப்பட்ட வழக்குகளின் ஊடாகவும் உரித்துகள் வழங்கப்பட்டுள்ளமையை இன்றைய விசாரணையின் போது, நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனநாயக உரிமையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு 106 ஆம் பிரிவின் கீழ், பொலிஸாரால் வழக்கு தொடர முடியாது என்பதையும் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரியதாக எம்.ஏ சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.



போருக்குப் பிந்தைய தமிழ் அரசியல் பிளவுகள் நீதி தேடும் முயற்சிகளை மந்தமாக்குகின்றன: மனித உரிமை சட்டத்தரணி வசந்தராஜ்