பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டிவனியாவை விடுதலை செய்ய கோரி மகஜர் (Photos)
ஊடகவியலாளரும், கவிஞரும், விளையாட்டு வீராங்கனையுமான டிவனியாவை விடுதலை செய்யுமாறு தெரிவித்து மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனிடம், டிவனியாவின் குடும்பத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து குறித்த மகஜரை கையளித்தனர்.
கடந்த வருடம் மார்ச் மாதம் 29ஆம் திகதி டிவனியா மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றிய விமல் எனும் மற்றுமொரு சந்தேகநபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தீவிரவாத கொள்கைகளைப் பரப்பும் வகையில் செயற்படுகின்ற இணையத்தளம் மற்றும் யூடியூப் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்குப் பல தகவல்கள் கிடைக்கப் பெற்றதாகவும், இவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய குறித்த யூடியூப் மற்றும் இணையத்தளம் என்பவற்றை நிர்வகித்த அலுவலகம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளைப் பரப்பும் வகையிலான செய்திகள் இவற்றினூடாக வெளியிடப்பட்டுள்ளதாகவும், குறித்த அலுவலகத்திலிருந்த 35 வயதுடைய பெண் ஒருவரும், 36 வயதுடைய ஆண் ஒருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்போது 5 மடிக்கணனிகள் உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
2011ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைகளைப் பரப்புதல், அவ் அமைப்பின் சின்னத்தை வைத்திருத்தல், இலங்கையில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடுதல் ஆகிய குற்றத்தின் கீழ் குறித்த கைது இடம்பெற்றதாகவும், அதற்கமையவே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டிவனியாவை விடுதலை செய்யக்கோரி இன்று அவரது தாயார் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இவர்களிற்கு கிராம மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
குறித்த விடுதலையை வலியுறுத்தி 1500 கையொப்பங்கள், கிராம மட்ட அமைப்புக்களின் ஒப்பங்களுடன் இன்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
இம்மாத இறுதிக்குள் டிவனியாவை விடுதலை செய்யாவிடின் முதலாம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக டிவனியாவின் தாயார் ஊடகங்களிற்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு
முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் கரைச்சி பிரதேச சபை
உறுப்பினர் ஜீவராசா ஆகியோர் வலியுறுத்தி கருத்து தெரிவித்திருந்தமை இங்கு
குறிப்பிடத்தக்கதாகும்.













