யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் : பலரும் கண்டனம்
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சந்தேகம் வெளியிட்டார்.
யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். குறித்த தகவலறிந்து நேற்று அங்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
இந்த சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலுக்கு பின்னர் துண்டுப்பிரசுரம் போடப்பட்டிருக்கின்றது. எங்களைப் பொறுத்தவரையில் குறித்த தாக்குதலை நடத்தியவர்களின் பின்னணியை மூடி மறைப்பதற்காக குறித்த துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
திருநங்கை சார்ந்த தரப்புக்களால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதந்தபோது ஊடகவியலாளர் பிரதீபனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜனாதிபதியின் நிகழ்வுகளில் அவரை அனுமதிக்க வேண்டாம் என பாதுகாப்பு தரப்புக்களால் அறிவிக்கப்பட்டதாக சொல்லி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பில் சர்வதேச தூதரகங்கள், சர்வதேச ஊடக அமைப்புக்களுக்கு அவரால் முறைப்பாடு அனுப்பப்பட்டது. 2009இல் புனர்வாழ்வுக்கு பின்னர் பிரதீபன் ஊடகத்துறைக்குள் பிரவேசித்து 15 ஆண்டுகளாகின்றது. தென்னிலங்கையில் வருகைதருபவர்களின் எத்தனையோ நிகழ்வுகளுக்கு செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனால் ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுமதிக்காதமை வேண்டுமென்றே தம்மை அவமானப்படுத்த மேற்கொள்ளப்பட்டதாகவும், தனது தொழிலை சுதந்திரமாக செய்முடியாது நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் ஒரு சில ஊடகங்களிலும் செய்தி வந்திருக்கிறது.
அவ்வாறு அனுமதிக்கப்படவில்லை என்பது தொடர்பில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பிரதீபனிடம் உளவுத்துறை விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றது. இவ்வாறானநிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு அச்சுறுத்தல் விடுக்கும்முகமாகவே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தெரியாமல் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இதற்கு முழுப் பொறுப்பையும் அரச புலனாய்வுப் பிரிவினர் ஏற்கவேண்டும். முன்னாள் போராளிகள் 15 ஆண்டுகளுக்கு பின்னரும் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழலையே இது காட்டுகின்றது. - என்றார்.
செய்தி - தீபன்
மட்டக்களப்பு ஊடக அமையம் கோரிக்கை
யாழில் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் தாக்குதல்தாரிகள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் நேற்று (13.06.2024) மட்டக்களப்பு ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்முறைக்கும்பல்
'யாழ்ப்பாணம் - அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நேற்று (13) அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.
இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
"திருநங்கைளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டிருந்தது.
கோழைத்தனமாக ஊடகவியலாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் ஊடகவியலாளரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் ஊடகவியலாளர்கள்
இந்நிலையில், வடகிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தமது கடமையினை முன்னெடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கருத்துகளை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாதவர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தங்களது அடாவடித்தனங்களையும் அச்சுறுத்தலையும் ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கும் நிலைமையினை தடுக்கும் வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஊடகவியலாளர் பிரதீபனின் வீட்டின் மீது தாக்குதல்கள் மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் ஓரளவாவது சுதந்திரமாக தமது கடமைகளை முன்னெடுப்பதற்கான வழிகள் ஏற்படுத்தப்படும்.
கடந்த காலத்தில் வடகிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை முன்னெடுக்க முடியாத வகையிலான அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே இவ்வாறான நிலைமைகள் இல்லாமல்செய்யப்பட்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தினை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ் வடமராட்சி ஊடக இல்லம் கண்டனம்
ஊடகவியலாளர் தம்பித்துறை பிரதீபனின் வீட்டின் மீது நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல் மற்றும் உயிரச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடானாது, ஆயுத முனைகளால் பேச முடியாததை வாள் முனையிலும் பெற்றோல் குண்டுகளாலும் பேசி மௌனிச்செய்யும் அடக்குமுறையின் வெளிபாடாகும். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். என யாழ் வடமராட்சி ஊடக இல்லம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாள்கள் மற்றும் பெற்றோல் குண்டுகள் மூலம் ஊடகவியலாளர் த.பிரதீபனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் வீட்டில் இருந்த உடமைகளை எரித்து நாசப்படுத்திய தரப்பினர், சம்பவ இடத்தில் மூன்றாம் பாலினத்தவரின் பெயரில் துண்டுப் பிரசுரத்தை வீசிச் சென்றுள்ளதன் மூலம் அவர்கள் மீது பழியை போட்டுவிட்டு கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கையாகவே பார்க்கமுடிகிறது.
குறித்த வன்முறை தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் பாரிய சதியொன்று புதைந்துள்ளதை நாம் அவதானிக்கின்றோம். கடந்த இரு மாதங்களாக நாட்டின் ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தின் போதான நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர் த.பிரதீபனுக்கு ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரால் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் தமிழ் ஊடகத்துறையின் மீதான நேரடி மற்றும் மறைமுக தாக்குதல் சம்பவங்கள், படுகொலைகள், உயிரச்சுறுத்தல் நடவடிக்கைகள் மற்றும் விசாரணை கெடுபிடிகள் என்பன இன்றும் அதேவடிவத்தில் தொடர்ந்து வருகின்ற நிலையில் இவ்வாறான வன்முறைக் கும்பல்களின் மூலம் ஊடகவியலாளர்களை மௌனிக்கச் செய்யும் எத்தனிப்பானது மிக மிக ஆபத்தான அனுகுமுறையாகும்.
தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு இருப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் இன்றைய சூழமைவில் தமிழர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும், நெருக்கடிகளையும் வெளிக்கொணரும் ஒரே வழிமுறையாக ஊடக பரப்பு இருந்து வருகிறது.
இவ்வாறான நிலையில் நிகழ்ந்துள்ள இத்தாக்குதலானாது ஊடக சுதந்திரத்தின் மீதான பாரிய அச்சுறுத்தலாகும். இச் செயற்பாட்டினை தனியே குறித்த ஒரு ஊடகவியலாளருக்கு எதிரான உரிமை மீறலாக கடந்து சென்றுவிட முடியாது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், பல்வேறு வடிவங்களில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த அடக்குமுறையானது புதிய புதிய வடிவங்களில் இன்றும் தொடர்ந்தவண்ணமேயுள்ளது.
இவ்வாறு உயிர்ப்பலியெடுப்புகள், காணாமல்போகச் செய்தல்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தவாறே தமிழ் ஊடகத்துறை தமிழ் மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து வருகிறது.
அதனையும் நசுக்கி தமிழர்களது குரலை மௌனிக்கச் செய்யும் விதமாக ஊடகத்ததுறை மீதான இவ்வாறான தலையீடுகளை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, இதுபோன்ற அடக்குமுறை செயற்பாடுகள் உடனடியாகவே தடுத்து நிறுத்தப்பட்டு ஊடக சுதந்திரத்தை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்துகின்றது.
செய்தி - எரிமலை
கிளிநொச்சி ஊடக அமையம் கண்டனம்
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது 13.06.2024 அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது அவரது ஊடகப்பணியை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி அவரை அடிபணிய வைக்கும் நடவடிக்கையே எனத் தெரிவித்துள்ள கிளிநொச்சி ஊடக அமையம் இத் தாக்குதல் முயற்சிக்கு தனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.
இது குறித்து கிளிநொச்சி ஊடக அமையும் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கையை பொறுத்தவரை ஊடவியலாளர்கள் தங்களது கடமைகளின் போருட்டு அதிகளவு சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் என்பது மிக மோசமானதாக காணப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இவற்றையெல்லாம் கடந்து தங்களது கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். ஊடகத் தொழில் என்பது முக்கியமாக பிராந்திய செய்தியாளர்களின் பொருளாதார நிலைமை என்பது கவலைக்குரியது.
அவர்களுக்கு ஊடகத் தொழில் மூலம் கிடைக்கின்ற பொருளாதார நன்மை சொற்பமானதே இந்த நிலையில் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களது சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்தி அச்சுறுத்தும் செயற்பாடுகள் மன்னிக்க முடியாத நடவடிக்கைகள் ஆகும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.
எனத் தெரிவித்துள்ள கிளிநொ்சசி ஊடக அமையம் இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சட்டநடவடிக்கை என்பது இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாதிருப்பதனை உறுதி செய்வதோடு,ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்தி - சுழியன்
அம்பாறை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது வன்முறைக்கும்பல் மேற்கொண்ட தாக்குதலை கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் இந்த வன்முறைக் கும்பலை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் அதேவேளை ஊடகவியலாளின் பாதுகாப்பை பொலிசார் உறுதிபடுத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் அம்பாறை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பாறை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடகவியலாள் பிரதீபனின் வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதலை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (14) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியதுன் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் ஊடக அடக்கு முறையை பிரதிபலிப்பதுடன் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழத்துவிடப்பட்ட திட்டமிட்ட ஒரு செயலாக பார்க்கின்றோம். அதேவேளை தொடர்ந்து தமிழ் ஊடகவியலாளர் மீது குறிவைக்கப்பட்டு தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் இடம்பெற்றுவருகின்றது.
இவ்வாறான வன்முறை மூலம் கருத்துக்களை எதிர் கொள்ள முடியாதவர்கள் ஊடகவியலாள்களின் கழுத்தை நெரிக்க முடியும் என்ற நப்பாசையுடன் இந்த திட்டமிட்ட தாக்குதல்களை மேற்கொண்டுவரும் கோழைத்தனமான ஒரு செயலாகும்.
ஊடகவியலாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் ஊடகவியலாளரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளவேண்டும்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மக்கள் மீதும் ஊடகவியலாளர்கள்;; மீதும் கட்டவித்து விடப்பட்டுள்ள வன்முறை கும்பலை இல்லாது செய்ய வேண்டியது பொலிசாரின் கடமையாகும் எனவே பொலிசார் உடனடியாக ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் அதேவேளை ஊடகசுதந்திரம் ஊடகவியலாளர்களும் பாதுகாக்கப்படவேண்டும் இதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
செய்தி-பவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |