கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றத்தில் குளறுபடி: ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு
கல்வி அமைச்சின் முறையான திட்டம் இல்லாமையினால் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இடமாற்றத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு இன்று வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்தின் ஆசிரியர்கள் இடமாற்றமானது அரசியல்வாதிகளின் தலையீட்டினால் தடைப்பட்டுள்ளது. ஆளுநரின் பணிப்புரையின் அடிப்படையில் தரவுகள் பெறப்பட்டு உரிய முறையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான எந்த ஒரு தகவலும் பெறப்படவில்லை.
குறித்த விடயம் இன்றைய விஜயத்தின்போது கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருடனான கலந்துரையாடளில் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் தரவுகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசிரியர்களின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தாமல் புதிய தரவுகளை பெரும் நோக்கில் இதுவரை தரவுகளும் பெறப்படாமல் காலம் தாழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
இவ்வாறு வருடக்கணக்கில் பணிபுரியும் ஆசிரியர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவே காலம் தாழ்த்தி செல்வதாகவும், கல்வியமைச்சின் சீரான ஒரு திட்டம் இல்லாமையினால் காலம் தாழ்த்துவதை விட்டுவிட்டு உரிய ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு இதன்போது கோரிக்கைவிடுத்துள்ளார்.



