யாழ். வல்லைவெளிப் பகுதியில் பெண்களிடம் நகைகள் கொள்ளை
யாழ். வல்லைவெளிப் பகுதியில் மூன்று பெண்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த கொள்ளை சம்பவம் நேற்று (11.10.2022) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
வல்லைவெளி பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களின் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பெறுமதியான பொருட்கள் கொள்ளை
குறித்த பெண்கள் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி உட்பட சுமார் 8 பவுண் நகைகளே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு சில மணி நேரத்தில், வல்லைவெளிப் பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு பெண்ணொருவரை விபத்துக்குள்ளாக்கி விட்டு அவரிடமிருந்து ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலி மற்றும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வலிகாமம் பகுதியையும் வடமராட்சிப் பகுதியையும் இணைக்கும் பகுதியாக வல்லைப் பகுதி காணப்படுகின்றது.
இந்தப் பகுதி நீரேந்து பகுதியாகக் காணப்படுவதுடன் ஆள் நடமாட்டம் குறைந்த குடியிருப்புக்கள் அற்ற பகுதியாகும் என தெரியவருகிறது.
மின் விளக்குகளைப் பொருத்துமாறு கோரிக்கை
இந்தப் பகுதி இரவு வேளைகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தரப்புகள் அப்பகுதியில் மின் விளக்குகளைப் பொருத்துதல் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



