சிங்கள மக்களை திருப்திப்படுத்த அரசாங்கம் செய்த முயற்சியே ஜனாஸா எரிப்பு விடயம்! - சுமந்திரன்
முஸ்லிம் மக்களின் ஜனாசாக்கள் தொடர்பில் இலங்கை அரசு கடும்போக்கு சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தச் செய்த ஒரு விடயமே தவிர இது விஞ்ஞான ரீதியான பிரச்சனை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் சென்று சந்தித்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.
இன்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடனும் பங்குத்தந்தை ஆகியோருடனும் கலந்துரையாடியுள்ளனர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்கள் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக தங்களது உரிமைகளுக்காக எழுந்து நிற்பார்கள் என்பதற்கு இந்த இரணைதீவு மக்களுடைய பிரயத்தனமும் வெற்றியும் சான்றாக அமைகின்றது.
இங்கு வந்து மக்கள் குடியேறினாலும் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் இல்லை. வசதிகளைப் பெற்றுத் தருவதற்குத் தொடர்ந்தும் பல முயற்சிகளை நாங்கள் பல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்றோம்.
முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எந்த விதமான விஞ்ஞான ரீதியான பிரச்சினைகளும் இல்லை.
உலகில் 188 நாடுகளில் புதைப்பதற்கான அனுமதிகள் கொடுத்திருந்த போதும் இதனை ஒரு இனவாத செயலாக இலங்கை அரசாங்கம் தடுத்து இருக்கின்றது.
அதாவது கடும்போக்கு சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த செய்த ஒரு விடயமே தவிர இதில் விஞ்ஞான ரீதியான எந்த பிரச்சனைகளும் இல்லை.
இவ்வாறான இனவாத போக்கை கொண்டிருந்த இலங்கை அரசு ஐநா சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படுகின்ற பிரேரணைக்கு ஆதரவாக இருந்த பல முஸ்லிம் நாடுகள் எதிராக வாக்களிக்கும் அல்லது விலகி விடும் என்ற காரணத்தினால் தான் ஜனாஸாவை அடக்கம் செய்யும் எண்ணத்தை இலங்கை அரசாங்கம் திடீரென மாற்றிக் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.