தமிழ் எம்பிக்களை சந்தித்த ஜெய்சங்கர்! வெளியானது கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும்(Dr. S. Jaishankar), தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றது.
இதன்போது, பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
13இற்கு ஒரு தீர்வு..
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்(S.Shritharan) மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்(Selvaraja Kajendran) உள்ளிட்ட பலரும் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, தங்களது கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் கையளித்தார்.
மேலும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் என்பது சட்டம் சார்ந்த விடயம். இந்து லங்கா ஒப்பந்தம் என்பது ஒரு அரசியல் சார் விடயம். இந்த இரு விடயங்களையும் ஒரே மேசையில் வைத்து கதைக்கும் போதுதான் இதற்கொரு தீர்வை கண்டறியலாம் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது வலியுறுத்தியிருந்தனர்.
இந்து லங்கா ஒப்பந்தத்தை தூர வைத்து விட்டு 13ஆவது திருத்தத்தை மாத்திரம் பேசிக்கொண்டிருந்தால் அது சாத்தியப்படாது. 13ஆம் திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தருவதற்கு இதுவரை யாருமே ஒத்துவரவில்லை. இருக்கின்ற அதிகாரங்களிலும் நிறைய விடயங்கள் பறித்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இந்திய கொள்கை வகுப்பாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அரசியல் தரப்பினரோடு நாங்கள் மனம் திறந்த உரையாடலொன்றை மேற்கொள்ள வேண்டும். 37 வருடங்களாக இந்த விடயம் இருக்கின்றது. பூகோள அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
13ஆம் திருத்தம் தொடர்பில் அதன் சாதக மற்றும் பாதங்கள் தொடர்பில் அதனை மக்கள் வெறுப்பது தொடர்பிலும் துறை சார் ஆலோசகர்களுடன் தாங்கள் கலந்துரையாட வேண்டும் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு இதன்போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறியப்படுத்தினர்.
இது தொடர்பான விரிவான கருத்தாடல்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் 13ஆவது திருத்தத்தின் உண்மையென்ன பொய்யென்ன, நடைமுறைச் சாத்தியமானதா என்பதை நீங்களும் உணராலம் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் எங்களை, இந்தியாவின் முகமாகத்தான் சிங்கள அரசியல்வாதிகளும், சிங்கள மக்களும் பார்க்கின்றனர் என்பதையும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ் தரப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அத்துடன், இன்றையதினம் பொதுவேட்பாளர் என்ற விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம், பொது வேட்பாளர் என்ற விடயம் மக்களிடத்திலும் இன்று வலுப்பெற்றுள்ளது எனக் கூறப்பட்டதுடன், பொது வேட்பாளர் விடயமும் விரிவாக ஆரயப்பட்டது.
இதன்போது, பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஷ்வரன்(c v wigneswaran), சுமந்திரன்(M.A.Sumanthiran), கஜேந்திரன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும்(Sajith Premadasa), ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anurakumara Dissanayakke) உள்ளிட்டவர்கள் அரசியலமைப்பில் உள்ள 13ம் திருத்தச்சட்டத்தில் உள்ள மாகாண சபை முறையை நடைழுறைப்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர் என்று இந்த கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், உடனடியாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை சஜித் மற்றும் அனுர ஆகியோர் தருவதற்கு ஒப்புக் கொண்டார்களா என வியப்புடன் தமிழில் பதில் கேள்வியை சுமந்திரனை நோக்கி முன்வைத்தார். இதனையடுத்து, சுமந்திரன் அவ்விடத்தில் அமைதியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தங்களது தரப்பு ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதாகவும் அந்த இடத்தில் வலியுறுத்திக் கூறியிருந்ததுடன் தங்களது தரப்பு கருத்துக்களை ஒரு அறிக்கையாக ஜெய்சங்கரிடம் கையளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |