யாழ்.சிறைச்சாலை தொடர்பில் அவதூறு ஏற்படுத்தினார் என்று பெண்ணொருவருக்கு எதிராக முறைப்பாடு
சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என தெரிவித்து பெண்ணொருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் யாழ்.சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்றையதினம்(6) முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கசிப்பு தொடர்பான நீதிமன்ற பிடியாணை மூலம் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பில் கைதியின் சகோதரி யாழ்ப்பாணத்தில், அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை தொடர்பில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக குற்றஞ்சாட்டியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.சிறைச்சாலை
யாழ் சிறைச்சாலை அதிகாரிகளினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில நேற்றையதினம்(6) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 7ம் திகதி கசிப்புடன் தொடர்புடைய வழக்கு ஒன்றுக்காக சிவராமலிங்கம் தர்சன் என்ற நபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நிதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் இரவு 10:20 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
சிறைச்சாலையின் உள்ளே அனுமதிக்க முற்பட்ட பொழுது குறித்த நபர் வலிப்பு காரணமாக நிலத்தில் விழுந்துள்ளார். அவர் சக கைதிகளினால் காப்பாற்றப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் முதலுதவி அளிக்கப்பட்டு சிறைச்சாலை வாகனம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
முறைப்பாடு
பின்னர் 9ம் திகதி சிகிச்சை முடிந்து வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மறுநாள் 10ம் திகதி காலை 7 மணியளவில் நோய் உபாதைக்கு உள்ளாகி நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது கோமா நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வரப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவரது சகோதரி முன்னுக்கு பின்னர் முரணான தகவல்கள் மூலம் முதலில் பொலிஸார் தாக்கியதாகவும், சிறைச்சாலையில் தாக்கியதாகவும் ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.