எங்களுடைய காணிகளை எங்களிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சினை: யாழ்.வலி வடக்கு மக்கள் கோரிக்கை
நீண்ட காலமாக யாழ்.வலி வடக்கு மக்களாகிய நாங்கள் முகாம் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற நிலையில், குறித்த முகாம் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என வலி. வடக்கு பொலிகண்டி நலன் புரி நிலையத்தில் வாழ்ந்து வரும் மக்கள் கூட்டாகக் கோரிக்கை வைத்துள்ளனர்.
வலி வடக்கு பொலிகண்டி நலன் புரி நிலையத்தில் வாழ்ந்து வரும் மக்களை மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேரடியாகச் சென்று சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பு நேற்றைய தினம் (29.05.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
பல்வேறு கஷ்டங்களையும் துன்பங்கள்
இதன்போது மக்கள் தெரிவிக்கையில்,
நாங்கள் தொடர்ச்சியாக எமது சொந்த இடங்களை விட்டு அகதி முகாமில் 30
வருடங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம்.
மாரி மாரி வருகின்ற அரசாங்கம் 30 வருடங்களுக்கு மேலாக எங்களை ஏமாற்றி வருகின்றனர். நாங்கள் முகாமில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம்.
மழைக் காலங்களில் நாங்கள் பல்வேறு கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வருகிறோம். எனவே எங்களுடைய காணிகள் உடனடியாக எங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அதற்கு உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பிரதேச செயலகம் மற்றும் அதிகாரிகள் வந்து தவறாது பதிவுகளை மேற்கொண்டு செல்லுகின்றனர்.
தொடர்ந்து பல போராட்டங்கள்
ஆனால், காணி விடுவிப்புக் கான எவ்வித முன்னேற்றமும் இல்லை. நாங்கள் தற்போது உள்ள முகாமில் இருந்து எங்களை உடனடியாக எழும்புமாறு குறித்த காணி உரிமையாளர்களினால் கோரப்படுகின்றது.
மேலும், எங்கள் சொந்த இடங்களில் அரச படைகள் முகாமிட்டுள்ளனர். எங்களுடைய காணிகளை எங்களிடம் ஒப்படைப்பதில் யாருக்கு என்ன பிரச்சினை? யுத்தம் முடிந்து இன்று சுமார் 15 வருடங்கள் கடந்து விட்டது.
அத்துடன், எமது காணிகள் விடுவிக்கப்படவில்லை. எமது காணிகளை விடுவிக்கக்கோரித் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். எமது காணிகள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டு நாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.
நாங்கள் தொடர்ந்து இந்த நாட்டில் அகதியாக வாழ முடியாது. எனவே எமது காணியை மீட்டுத்தர அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் எனக் குறித்த மக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






