கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி
பொரலஸ்கமுவ, மாலனி புலாத் சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இசை நிகழ்ச்சியில் தகராறு
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் கல்கிஸையைச் சேர்ந்த 25 வயதுடைய கிஹான் துலான் பெரேரா என்ற இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொரலஸ்கமுவ பகுதியில் இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு உயிரிழந்த இளைஞர் உட்பட 9 பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் இரு தரப்பினரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் உதய குமார வுட்லர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




