யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம் (Photos)
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ( Orientation Programme)நேற்று (20) இடம்பெற்றது.
யாழ். பல்கலைக் கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையாட்டு விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி சி. சபா ஆனந் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினருமான சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை, இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடாதிபதி தெய்வி தபோதரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களுடன், பல்கலைக்கழகத்தின் பதிவாளர், நிதியாளர், நூலகர், மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர், மாணவர் நலச்சேவைகள் உதவிப்பதிவாளர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு புதுமுக மாணவர்களுக்கு பல்கலைக்கழக நடைமுறைகள் மற்றும் மாணவர் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்னர்.
இந்நிகழ்வில் பீடாதிபதிகள், முன்னாள் விளையாட்டு விஞ்ஞானத் துறை இணைப்பாளர்கள், உடற்கல்வி அலகின் பணிப்பாளர் மற்றும் பயிற்றுநர்கள், விரிவுரையாளர்கள், முன்னாள் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள், விளையாட்டு விஞ்ஞானத் துறையின் உயர் டிப்ளோமா மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்காக யாழ். பல்கலைக்கழக உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்பு பட்டக் கற்கை நெறிக்காக விண்ணப்பித்து, பல்கலைக்கழகத்துக்கான அடிப்படை உள்நுழைவுத் தகைமையான 3S சித்திகளைப் பெற்றிருப்பதுடன், அனுமதிக்கான சிறப்பு உளச்சார்பு - செயன்முறைத் தேர்வில் 50 புள்ளிகளுக்குக் குறையாமலும் பெற்ற மாணவர்களின் இசற் புள்ளி அடிப்படையில் சுமார் 50 மாணவர்கள் இந்தப் பட்டப் படிப்புக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் விளையாட்டுத் துறையிலான ஈடுபாடும், சாதனைகளும் அனுமதிக்கான மேலதிக புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







