யாழ். பல்கலை நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை! எம்.பி. ரஜீவன் பகிரங்கம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக நான் குரல் கொடுத்தேன். ஆனால், நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதில் அரச தரப்பு எம்.பி. ஒருவர், தனது அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், தன்னுடைய அனுமதியுடனுமே நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து, ரஜீவன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வி அமைச்சின் கல்வி அமைச்சு சார் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், உயர்கல்விக்கான உபகுழு உறுப்பினராகவும், மேலும் யாழ்ப்பாணம் மாவட்ட கல்விக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினராகவும் நான் செயற்பட்டு வருகின்றேன்.
2025 செப்டெம்பர் 12ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வி உப குழு கூட்டத்தில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்கள் நியமனம் இதுவரை மேற்கொள்ளப்படாததற்கான காரணத்தைக் கேட்டேன். மேலும், அவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.
ஊழியர்கள் நியமனம்
அந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரும் கலந்துகொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபர் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நடத்திய போராட்டத்திலும் கலந்து கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்த தகவல்களை நேரடியாக அறிந்தேன்.

உடனடியாகக் கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் கல்வி அமைச்சு சாரா ஆலோசனைக்குழுவுக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதியும் அனுப்பியிருந்தேன். உயர்கல்வி உப குழுவின் தலைவர் பிரதிக் கல்வி அமைச்சர் மதுர செனவி என்னுடன் கலந்துரையாடி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கான ஆளணி நியமனம் தொடர்பாக விரைவில் கூட்டம் நடத்துவோம் என உறுதியளித்துள்ளார்.
எனவே, கல்விக்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினராக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக மட்டுமே நான் செயற்பட்டு வருகின்றேன் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகின்றேன். நான் ஒருபோதும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்களில் தலையிட்டதில்லை. மேலும் எந்த நியமனங்களையும் யாருக்காகக் கோரியதும் இல்லை.
இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் முரணானது. இந்தச் செய்தி உண்மையை மறைத்து ஒரு பிழையை மூடிமறைக்கத் திட்டமிட்ட ஒரு குழுவினரால் பரப்பப்பட்ட தவறான தகவல் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இதில் தொடர்புடையவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்பதையும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri