யாழ்.பல்கலையில் அலுவலக உதவியாளர் நியமனத்தில் முறைகேடு – பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு
யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்படவில்லை எனவும் புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் யாழ். ஊடக அமையத்தில் இன்று(01.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
அலுவலக உதவியாளர் பதவி
யாழ் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக அங்கு தற்காலிகமாக பணியாற்றிவந்த தாம் உள்ளிட்ட 400ற்கும் மேற்பட்டோர் போட்டிப் பரீட்சை உள்ளிட்ட தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த நிலையில், 71 பேருக்கு மாத்திரம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக பணியாற்றி வந்த தங்களை நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் உரிய முறையில் கருத்திற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த போதிலும், தற்போது புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளமை தங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதகமான பதில் கிடைக்காமை
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தமது நிலைமை குறித்து எடுத்துரைத்தபோதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டோர் கூறியுள்ளனர்.

தமது சேவை, அனுபவம் மற்றும் நீண்டகால பணிக்காலம் ஆகியவற்றையும் தமது வாழ்வாதார பொருளாதார ஈட்டலையும் கருத்திற் கொண்டு, நியாயமான தீர்வொன்றை வழங்குவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், அலுவலக உதவியாளர் நியமன நடைமுறை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.