யாழ்.தமிழரை இனியும் ஏமாற்ற முடியாது: குருசாமி சுரேந்திரன் தெரிவிப்பு (Video)
யாழ்.தமிழ் மக்களை இனியும் முண்ணனியினர் ஏமாற்ற முடியாது என ரெலொவின் ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
ரெலோ இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 37 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
“அண்மையில் மிகப்பெரிய ஒரு நிர்வாக முடக்கல் போராட்டத்தினை வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் நடத்தினோம். எனினும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்தை எதற்காக செய்திருந்தோம் என்பதை அறியாத ஒரு தரப்பும் உண்டு.
நான் நேரடியாகவே கூறுகின்றேன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அந்த நிர்வாக முடக்கலை எள்ளி நகையாடினார்கள். ஆனால் அதனுடைய விளைவு இன்று தெரிகிறது தமிழ் மக்களின் உணர்வுகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று தையிட்டியில் விகாரை கட்டி முடிந்து கலசம் வைத்த பின் விகாரையினை இடித்து விட போகின்றோம் என தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஏமாற்று அரசியல்வாதிகள்
அதற்காக தான் நாங்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நிர்வாக முடக்கலை ஏற்பாடு செய்திருந்தோம்.
தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் மக்கள் இவ்வாறான ஏமாற்று அரசியல் செய்பவர்களை முற்று முழுதாக நிராகரிக்கவேண்டும் சரியான தலைமையினை தெரிவு செய்யவேண்டும், தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய தலைவர்களை அடையாளம் காண வேண்டும். மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபடுவோருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாளை தமிழர் பகுதியில் விகாரை வரும் எல்லா இடங்களிலும் வரும் தனித்தனியே போராட போகின்றோமா அல்லது மக்களை ஒரு தேசமாக ஒருங்கிணைத்து இவற்றைத் தடுத்து நிறுத்த போகின்றோமா என்பதுதான் எமது கேள்வி” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (06.05.2023) ரெலோ அமைப்பின் வவுனியா அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு்ள்ளமையும் குறிப்பிடத்தக்கது.