யாழ் . வரும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபடும் பெண்: வெளியான எச்சரிக்கை
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) வந்துள்ளவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி , கல்வியங்காடு , கோப்பாய் , கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை குறித்த பெண் இலக்கு வைத்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பெண் , தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபடுகின்றார்.
பண மோசடி
கடந்த செவ்வாய்க்கிழமை வீடொன்றுக்கு வேகோ மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் , தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடியாக பெற்று சென்றுள்ளார்.
பணத்தினை கொடுத்த வெளிநாட்டவர் , அது தொடர்பில் தனது உறவினர்களுக்கு தெரிவித்த போதே , குறித்த பெண் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வேறு நபர்களிடமும் பணத்தினை வாங்கியுள்ளமையை உறவினர்கள் கூறியுள்ளனர்.
அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளது.
பொலிஸார் அறிவுறுத்தல்
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் , தான் விசாரணை நடவடிக்கைகளால் தான் நாட்டுக்கு திரும்ப முடியாது கால தாமதம் ஏற்படும் என கருதி முறைப்பாடு செய்யவில்லை எனவும் பொலிஸ் நிலையத்தில் மோசடி பெண் குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார்.
பெண்ணின் மோட்டார் சைக்கிள் இலக்கம் , பெண் தொடர்பான அடையாளங்களை பொலிஸாருக்கு தெரிவித்தமையின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை , வெளிநாடுகளில் இருந்து வருவோரை இலக்கு வைத்து , நன்கொடைகள் , மருத்துவ உதவிகள் என கோரி வருவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |