யாழில் சீனியை பதுக்கும் வர்த்தகர்கள்: விரைவில் நடவடிக்கை என்கிறார் மாவட்ட செயலாளர்
யாழ். மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழில் நேற்று(12.12.2023) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை கூறியுள்ளார்.
செயற்கை தட்டுப்பாடு
மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தியோகபூர்வமாக இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
சீனியின் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனி தனியார் இறக்குமதியாளர்களிடம் இருப்பதாகவும் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனி பதுக்கி வைத்திருந்தால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது.
ஊசி மூலம் போதைப்பொருள்
சட்ட வைத்திய அதிகாரிகளின் தகவல் படி யாழ். மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கலந்துரையாடி நடவடிக்கைக்கு வலியுறுத்தியுள்ளேன்.
சில இடங்களை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
புளிக்கு பாரிய தட்டுப்பாடு
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பயன்தரு புளியமரம் நாட்டியதாக வரலாறு இல்லை. தற்போது உள்ள புளியமரங்கள் எல்லாமே இயற்கையாக விதை மூலம் பரவியதே. அவையும் தற்போது வெட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
தற்போது நாட்டுக்கு தேவையான புளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் உதவியை கோரியுள்ளேன். எதிர்காலத்தில் புளிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும்.
தற்போது புளியமரத்தை நாட்டினால் பத்து பதினைந்து வருடங்களில் புளிக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கே உரித்தான பாரம்பரிய பழ மரங்கள் வெட்டப்படுகிறது. மா மரம், பலா மரம் என்பன வெட்டப்படுகிறது. இது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும்.பாரம்பரிய பழ மரங்களை பாதுகாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |