நல்லூர் கந்தன் பெருவிழா காளாஞ்சி யாழ்.மாநகரசபையிடம் கையளிப்பு (Photos)
யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சோபகிருது வருட (2023) உற்சவத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண மாநகரசபைக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி கொடுக்கும் நிகழ்வு இன்று (20.05.2023) இடம்பெற்றுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.
நல்லூர் கந்தன் பெருவிழா
நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ் மாநகர சபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி காளாஞ்சி கையளிக்கப்பட்டது.
பாரம்பரிய முறை
இந்த வைபவத்தின் போது பாரம்பரிய முறைப்படி யாழ்.மாநகரசபை வளாகத்தில் வாழை, தோரணங்கள் கட்டி அலங்காரம் சிறப்பாக அமையப்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் யாழ்.மாநகரசபை ஆணையாளர், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களுடன், நல்லூர் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.




