யாழில் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் (Jaffna) - இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது பிரதேச வாழ் இளைஞர்களினால் இன்றைய தினம் (07.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு
கடந்த நான்கு - ஐந்து வருடங்களுக்கு மேலாக இணுவில் காரைக்கால் அம்மன் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான குப்பைகளை கொட்டும் பகுதியில் மலை போல் குப்பைகளை குவித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குவிக்கப்படும் கழிவுகளினுள் மருத்துவ கழிவுகள் கால்நடைகளின் கழிவுகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு எரிப்பதன் ஊடாக அயலிலுள்ள கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவும் குறித்த குப்பைகளில் தீ பரவல் ஏற்பட்டு சுற்றுச்சூழலில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் நேற்றைய தினம் (06) ஏற்பட்ட தீ பரவலினால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கியதையடுத்து இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களது கோரிக்கை
மேலும் இங்கு பணி புரிபவர்கள் பணத்தைப் பெற்று வேறு பகுதிகளில் உள்ள பொது குப்பை கழிவுகளையும் இங்கே போடுவதற்கு அனுமதி வழங்குவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |