நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்!: போக்குவரத்து தடை அறிவிப்பு (Photos)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவுக்கான கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை (02) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது.
கொடிச்சீலை கையளிப்பு வைபவம்
இதனை தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வுக்காக கொடிசீலை கையளிக்கும் நிகழ்வை முன்னிட்டு சட்டநாதர் கோவிலை அண்மித்துள்ள வேல் மடம் முருகன் கோவிலில் இன்று(1) காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து சிறு தேரில் கொடிசீலை நல்லூர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
போக்குவரத்து தடை
மேலும், நல்லூர் ஆலய சுற்றுவீதிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் எனவும் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம் (02) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (01) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.
இதன்படி, நல்லூர் ஆலய சுற்றுவீதிகள் மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ். மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின்
போது கச்சேரி நல்லூர் வீதியினூடாகவே பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அனுமதி அட்டை
நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் வசிப்பவர்கள் வாகனங்களை உட்கொண்டு செல்ல யாழ். மாநகர சபையினால் நிபந்தனையுடனான விசேட அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நல்லூர் ஆலய வெளி வீதியை சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக்கொடிகளால் எல்லையிடப்பட்டுள்ளது.
இதனால் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டிகளை உட்செலுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா விரைவில் ஆரம்பம்! மகோற்சவ ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல் |