யாழ். மாநகர மேயருக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் விடுத்த அவசர பணிப்புரை
மாதாந்தக் கூட்டத்தில் வெளிநடப்புச் செய்தமையால் யாழ். மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவு இன்னமும் வழங்கப்படாமல் உள்ள நிலையில் அதனை உடனடியாக வழங்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சபையின் செப்டெம்பர் மாத அமர்வு கடந்த 27ஆம் திகதி நடைபெற்றது.
சபை அமர்வில் வெளிநடப்பு
யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் ஆதரவு தரப்பினர் தவிர்ந்த ஏனைய கட்சிகள் சபை அமர்வில் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து செப்டெம்பர் மாத கொடுப்பனவை யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன் இடைநிறுத்தியுள்ளார்.
கூட்டத்தில் முழுமையாக பங்குபற்றியவர்களுக்கு உரிய முறையில் வேதனம் வழங்கப்படும் என்று இது தொடர்பில் மேயர் பதிலளித்திருந்தார்.
உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு
மாநகர மேயரின் இந்த நடவடிக்கை தொடர்பில் சபை உறுப்பினர்கள் 5 பேர் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறையிட்டிருந்தனர்.
அத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையிலும் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்தநிலையில் சபை உறுப்பினர்களின் கொடுப்பனவை வழங்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் பணித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாநகர மேயரின் கருத்தை அறிந்துகொள்ள முற்பட்டபோதும் அது பயனளிக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
May you like this Video



