புலனாய்வுத் துறையால் மறைக்கப்பட்ட உண்மைகள்.. யாழில் சிறீதரன் எம்பி பகிரங்கம்
நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான நீதியை நிச்சயம் நிலைநாட்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதியுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது.
இத்தனை ஆண்டு காலப் போராட்டப் பாதையில், "தங்கள் பிள்ளைகள் நிச்சயம் திரும்பி வருவார்கள்" என்ற பெரும் கனவோடும் நீதிக்கான ஏக்கத்தோடும் போராடிய 260 இற்கும் மேற்பட்ட தாய்மார்களும் தந்தையர்களும் தம் உயிரைப் பறிகொடுத்துள்ளனர்.
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்..
நல்லிணக்க ஆணைக்குழு போன்ற அமைப்புகள் மூலமாக உண்மை கண்டறிய முயன்றபோது, சாட்சியமளிக்கச் சென்ற மக்களை இலங்கை புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தினர்.

வழியிலேயே கொட்டகைகளை அமைத்து மக்களைத் திசைதிருப்பி, சாட்சியம் அளிப்பதைத் தடுத்து நிறுத்தினர். இதனால் மக்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாத அச்சச் சூழ்நிலையிலேயே வாழ நேரிட்டதுடன், முழுமையான சாட்சியங்களை வெளிப்படையாக வழங்க முடியாமலும் போனது.
இதன் காரணமாக, உள்நாட்டு விசாரணை மற்றும் நீதி வழங்கும் முறைகள் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன. உள்நாட்டில் நீதி மறுக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றம் மூலமாக மட்டுமே தங்களுக்குப் பூரண நீதி கிடைக்க முடியும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முதன்முதலில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டபோது, அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆதரவளித்து உதவியது.
அன்றுமுதல் இன்றுவரை அப்பிரேரணைகள் வீணாகிவிடாமல், நீதியைப் பெறுவதற்கான முயற்சியில் அமெரிக்க நாடு காட்டிவரும் கரிசனையையும் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்." என்றார்.