அதிகாரிகளின் அசமந்தப் போக்கு: தொற்றுநோய்கள் பரவக்கூடிய அபாயத்தில் மக்கள் (Photos)
வடமராட்சியில் இருக்கக்கூடிய உள்ளூராட்சி மன்றங்கள் தங்களுடைய பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் கழிவுகளை பொறுப்பற்ற விதத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகள், வயல் நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் கொட்டுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தனியாருக்குச் சொந்தமான வயல் நிலங்கள் மற்றும் காணிகள் என்பன பாதிக்கப்படுவதுடன் சுற்றுச் சூழல் மாசடைதலும் நிலத்தடி நீர் மற்றும் நீர் மாசடைதல் என்பனவும் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மனித மலக்கழிவுகள்
இதே வேளை மனித மலக்கழிவுகள் உள்ளூராட்சி மன்றங்களினால் மனிதம் கழிவகற்றும் இயந்திரங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு நீர் நிலைகளில் அவை அகற்றப்படுகின்றன. இதனால் அப்பகுதி வீதிகளை பயன்படுத்துகின்றபோது துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் இக்கட்டான சூழலை எதிர்நோக்கி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வடமராட்சி மட்டுமன்றி தென்மராட்சியின் பல பிரதேசங்களிலுமுள்ள நீர் நிலைகள் மாசடைவதுடன் தொற்றுநோய்க்கு காரணமாக அமையக்கூடிய அபாயமும் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகளின் அசமந்தப் போக்கு
வடமராட்சியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களான பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை நகரசபை, வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை ஆகியன பருத்தித்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட. அல்லது பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசமான வல்லிபுரம், மாவடி சந்தி, முள்ளி பகுதிகளில் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கழிவுகள் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் உள்ளுராட்சி மன்றம் ஒன்றினுடைய தவிசாளர் ஒருவரை எமது ஊடகவியலாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது “இவ்வாறு கழிவகற்றுவது தவறு தான், ஆனால் என்ன செய்வது. வேறு இடம் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பருத்தித்துறை நகர சபை தவிசாளரை நேரடியாக சந்தித்து இவ் விடயமாக எமது ஊடகவியலாளர் வினவியபோது “இனிமேல் இவ்வாறு இடம் பெறாது என்று தெரிவித்துள்ளார்” எனினும் தற்போதும் இந்நிலையயே தொடர்கிறது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுற்றுச்சூழல் மாசு, தொற்றுநோய் அபாயம் தொடர்பில் பிரதேசங்களிற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகளிடம் வினவியபோது “உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும், அவ்வாறு இருந்தும் தமது மேலதிகாரிகள் ஊடாக குறித்த உள்ளூராட்சி மன்றங்களிற்கும், உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்தும் தலமை அதிகாரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டும் உடன் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும், எமக்கு தொலைபேசியில் தெரிவித்துடன் தமக்கு இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அதிகாரம் இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.



