யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும்: ஈ.பி.டி.பி வலியுறுத்து
யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரச வேலை வாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வடக்கு, கிழக்கிற்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், "வரவு செலவுத் திட்டம் வெளியாவதற்கு முன்னரே, ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. புதிய அரசாங்கம் இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதாக சொல்லப்படுகின்ற புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் கடந்த காலங்களைவிட வித்தியாசமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
ஆனால், எம்மை பொறுத்தவரையில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை உள்வாங்கியே வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டிய நிலையிலும், வரவு செலவுத்திட்டத்தின் உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக திறைசேரி செயலாளர் மத்திய வங்கி ஆளுநர் போன்றோர் கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில், கடந்த வருட வரவு செலவு திட்டத்தினை ஒத்த வரவு செலவுத் திட்டம் ஒன்றே வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக எதிர்பார்த்திருந்தோம்.
பெரும்பாலும் அவ்வாறான வரவு செலவுத் திட்டம் ஒன்றே ளெியாகி இருக்கின்றது. இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை பொறுத்த மட்டில், கிடைக்கின்ற வாய்ப்புக்களை தவற விடாமல் பயன்படுத்தி, முன்னோக்கி செல்லுகின்ற தரப்பு என்ற அடிப்படையில் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள், வெறுமனவே எழுத்தில் மட்டும் இல்லாமல், செயலிலும் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
ஜனாதிபதிக்கு கடிதம்
யாழ். நூலகத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள 100 மில்லியன் ரூபாய்களும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் கணினி வசதிகளை அதிகரிப்பதற்காகவும் முன்மொழியப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.
அதைவிட, தென்னாசியாவில் சிறந்த நூலகமாக காணப்பட்ட எமது நூலகத்தினை டிஜிற்றல் மயப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்துவதன் மூலம் தென்னாசியாவின் தலை சிறந்த நூலகங்களுள் ஒன்றாக விளங்கிய எமது நூலகத்திற்கு இன்னுமொரு பரிமாணத்தினை வழங்க முடியும் என்பதே எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சிந்தனையாக இருக்கின்றது.
இதனை வலியுறுத்தி எமது செயலாளர் நாயகம் அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுத இருக்கின்றார்.
இந்த வரவு செலவுத் திட்டம் எமது மக்களுக்கு நன்மையளிக்குமா இல்லையா என்பதற்கு அப்பால், கிடைத்திருப்பவற்றை சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அந்தவிடயத்தில், எமது மக்களினால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |