எரிபொருள் பெற்றுத்தர கோரி யாழ். மாவட்ட செயலாளருடன் வணிகர் கழகத்தினர் கலந்துரையாடல் (Photos)
யாழ்ப்பாண வணிகர் கழகத்தினருக்கும் யாழ். மாவட்ட செயலாளருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற எரிபொருள் நெருக்கடி தொடர்பாகவும் அதனை பெற்றுக்கொள்கின்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்ற பொழுது பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது குறைக்கப்பட்ட எரிபொருளின் விலை மிகவும் சொற்பம் எனவும் இதனை வைத்துக் கொண்டு
பொருட்களின் விலையைக குறைக்க முடியாது எனவும் எரிபொருளின் விலையை 100
ரூபாயிலிருந்து வரை குறைக்க வேண்டும் என்றும் இதன்போது வணிக கழகத்தின் தலைவர்
த.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் தற்போதைய எரிபொருட்களின் விலை மேலும் குறைக்கப்படும் பட்சத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையினை குறைப்பதற்கும் அது தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மகஜர் கையளிப்பு
அத்துடன், குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தினர் எரிபொருள் பெற்றுத்தரக்கோரி யாழ். மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகஜரினைப் பெற்ற மாவட்ட செயலாளர் எதிர்வரும் நாட்களில் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
