யாழில் சட்டவிரோத மண் அகழ்வு - கிராம இளைஞர்களின் துணிகர செயலால் முறியடிப்பு
யாழ். சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட கனரக (டிப்பர்) வாகனம் ஒன்று கிராம சேவகர் மற்றும் கிராம இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பகுதியில் இன்றைய தினம்(30.07.2023) சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட தரப்பினரை இளைஞர்கள் எதிர்த்தபோது ஒரு கனரக வாகனம் பிடிப்பட்டதோடு 5 கனரக வாகனங்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை அராலி மத்தி பகுதியில் உள்ள வயல்களுக்கு அண்மையில் உள்ள மண் பிட்டி ஒன்றில், சட்டவிரோத மண் அகழ்வு கும்பல் ஒன்று மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
சட்டவிரோத மண் அகழ்வு
இதன்போது வயலுக்கு சென்ற கிராம மக்கள் சிலர், "அனுமதி எடுத்தா மண் அகழ்கின்றீர்கள்" என வினவியபோது "ஆம், அனுமதி எடுத்து பொலிஸாருக்கு தெரிவித்து விட்டுத்தான் மண் அகழ்கின்றோம் எனவும் 12 மணிக்கு முதல் மண்ணினை அகழ்ந்து ஏற்றிச் செல்ல வேண்டும்" எனவும் கூறப்பட்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்பின்னர் அவ்விடத்திற்கு வந்த அந்த பிரதேச இளைஞர்கள் "யாரை கேட்டு மண் அகழ்கின்றீர்கள்? அனுமதி எடுத்தா மண் அகழ்கின்றீர்கள்?" என வினவினர்.
அதற்கு அவர்கள் "ஆம், அனுமதி எடுத்துத்தான் அகழ்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
"அப்படியானால் அனுமதிப் பத்திரத்தை காண்பியுங்கள்" என இளைஞர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அந்த குழுவினர் அனுமதிப்பத்திரத்தை காண்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து இளைஞர்கள் கிராம சேவகருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் குறித்த பகுதிக்கு கிராம சேவகர் விரைந்து சென்று, அனுமதிப் பத்திரத்தை காண்பிக்குமாறு கூறியவேளை அவர்களிடம் அனுமதிப்பத்திரம் இல்லாத விடயம் தெரியவந்தது.
தாமதமாக வந்த பொலிஸார்
இதனையடுத்து அந்த வாகனங்கள் தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“கிராம சேவகரால் பல தடவைகள் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை.
அதன்பின்னர் கிராம சேவகர், சங்கானை பிரதேச செயலருக்கு அழைப்பு மேற்கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினார். அதன்பின்னர் தாமதமாகவே பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து குறித்த டிப்பர் வாகனத்தையும் சாரதியையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
குறித்த மண் பிட்டிக்கு மறு புறமாக கடல் காணப்படுகிறது. மழை நேரங்களில் கடல் நீர் வயல்களுக்குள் வராமல் குறித்த மண்பிட்டியே தடுப்பு அணையாக உள்ளது. இந்த மண் பிட்டியை அகழ்ந்தால் கடல் நீர் வயல்களுக்குள் வந்து பயிர்ச்செய்கையே நாசமாகிவிடும்.” என தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |