இத்தாலியில் மாஃபியா கும்பலின் 232 மில்லியன் டொலர் சொத்துக்கள் பறிமுதல்
இத்தாலியின் மாஃபியா தலைவரான மறைந்த மேட்டியோ மெசினா டெனாரோ என்பவருடன் தொடர்புடைய 232 மில்லியன் டொலர் (சுமார் 1,900 கோடி ரூபாய்க்கும் மேல்) மதிப்புள்ள சொத்துக்களை இத்தாலிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பல தசாப்தங்களாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் மூலம் திரட்டப்பட்ட மாஃபியா நெட்வொர்க்கைக் குறிவைத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரகசியப் பணப் பரிவர்த்தனை
இத்தாலியின் நிதிப் பிரிவுக் காவல்துறையினரால் இன்று(28.05.2026) அறிவிக்கப்பட்ட இந்தச் சோதனையில், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், மொனாக்கோ மற்றும் லெபனான் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியிருந்த மாஃபியாவின் இரகசியப் பணப் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன.
1980-களில் இருந்து 'கோசா நோஸ்ட்ரா' என்ற சக்திவாய்ந்த மாஃபியா அமைப்பின் தலைவராக இருந்த டெனாரோ, 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த 2023 ஜனவரியில் கைது செய்யப்பட்டு, அதே ஆண்டு சிறையில் உயிரிழந்தார்.

அவர் இறந்த பிறகும் அவரது கூட்டாளிகளால் சட்டவிரோதப் பணம் சொகுசு விடுதிகள் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் சட்டபூர்வமான பொருளாதாரத்திற்குள் கொண்டு வரப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சொத்துக்களைக் கண்டறிய ட்ரோன்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் போன்ற அதிநவீன தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த வழக்கின் ஒரு பகுதியாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் 1992ஆம் ஆண்டில் நீதிபதிகள் படுகொலை மற்றும் 1993ஆம் ஆண்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கொடூரக் குற்றங்களில் டெனாரோவுக்குத் தொடர்பிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சொத்துப் பறிமுதல் நடவடிக்கை, மாஃபியா குழுக்கள் மீண்டும் தங்களை வலுப்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் ஒரு முக்கிய நகர்வு என இத்தாலியின் தலைமை மாஃபியா எதிர்ப்பு அரசு வழக்கறிஞர் ஜியோவானி மெலில்லோ தெரிவித்துள்ளார்.