ஐரோப்பியத் தூதுக்குழுவிடம் தமிழரசுக் கட்சி விடுத்த கோரிக்கை
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழுவினர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியப் பிரமுகர்களை நேற்று(11.02.2026) கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அரசியல் ரீதியாக முக்கியத்துவம்
இதில் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது பின்வரும் விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது என்று எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் அது தொடர்பான புதிய சட்ட வரைவுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை விரைந்து நடத்துவதன் அவசியம் குறித்துத் தூதுக் குழுவினருக்கு விளக்கப்பட்டது.
இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், மாகாண சபைத் தேர்தலை உரிய முறையில் நடத்தவும் இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் போதிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சி தரப்பில் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
இலங்கையின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வரும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழு, தமிழரசுக் கட்சியினருடன் நடத்திய இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.