தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது..!
தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது. குறுக்கு வழிகளிலாவது தேர்தலில் வெல்வது என்பதே அவற்றின் இலக்காக உள்ளது என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த 7 ஆம் திகதி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மாகாண சபைத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுப்பது என்றும், அரசியல் தீர்வு தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தையில் ஜனநாயகத் தேசியக் கூட்டணி சார்பாக அக்கூட்டணியிலுள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களும், தமிழரசுக் கட்சி சார்பாக அதன் பதில் தலைவர் சிவஞானமும், பதில் செயலாளர் சுமந்திரனும் கலந்து கொண்டனர். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.
குறிப்பாக கட்சியின் இன்னோர் அணியைச் சேர்ந்த சிறீதரன் கலந்து கொள்ளவில்லை. கிழக்கு மாகாணப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை. வாயளவில் இணங்கிக் கொண்டதே தவிர ஒப்பந்தங்கள் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை. எழுத்திலான இணக்கங்களுக்கே ஆயுள் குறைவாக இருக்கும் போது இந்த இணக்கம் கெட்டியாக இருக்கும் எனக் கூறிவிட முடியாது.

பேச்சுவார்த்தையின் நோக்கம் மாகாண சபைத் தேர்தலாக இருக்கலாம். இந்தப் பேச்சுவார்த்தையின் பிதாமகன் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் தான்.
இது விடயத்தில் சுமந்திரனுக்கு மூன்று வியூகங்கள் பிரதானமாக இருந்திருக்கின்றன. அதில் முதலாவது வரப்போகும் மாகாண சபைத் தேர்தல் மூலம் முதலமைச்சராக வருவது தான்.
தனித்து தமிழரசுக் கட்சியால் முதலமைச்சராக வர முடியாது என்பது சுமந்திரனுக்கு நன்றாகவே தெரியும். மாகாண சபைத் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களில் பலருக்கு கிடையாது. அதுவும் டித்வா புயல் பேரிடருக்கு பின்னர் இந்த நம்பிக்கை நன்றாகக் குறைந்துள்ளது.
ஆனால் சுமந்திரன் 2026 யூன் மாதமளவில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என திடமாகவே நம்புகின்றார். தன்னை சந்திப்பவர்களிடமும் அது பற்றிக் கூறுகின்றார். முதலமைச்சர் வேட்பாளராக தானே நிற்பேன் எனவும் கூறி வருகின்றார். சுமந்திரனின் நீண்ட கால முயற்சிகள் பெரியளவிற்கு வெற்றி அளிப்பதில்லை.
தமிழரசுக் கட்சியின் தலைவராக வருவதற்கு நீண்ட காலமாக முயற்சிகளைச் செய்தார். அதில் வெற்றி கிடைக்கவில்லை. பதில் செயலாளர் பதவி கூட குறுக்கு வழிகளினால் தான் கிடைத்தது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக சஜித் பிறேமதாசாவை ஆதரித்த போதும் அதிலும் போதிய வெற்றி கிடைக்கவில்லை.
ஹர்த்தால் போராட்டமும் வெற்றியைக் கொடுக்கவில்லை தவிர கட்சிக்காரர்கள் கூட சுமந்திரனுக்காக தீவிர பிரச்சாரம் செய்வார்கள் எனக்கூறி விட முடியாது. சிறீதரன் மௌனமாக இருக்கலாம். சுமந்திரனுக்காக மேடையேறுவார் எனக் கூற முடியாது.
தனிப்பட்ட செல்வாக்கு என்ற வகையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலோ, வன்னி தேர்தல் மாவட்டத்திலோ சுமந்திரனுக்கு செல்வாக்கு பெரிதாக இல்லை. யாழ்ப்பான மாவட்டத்தில் சிறீதரனுக்கும், வன்னி மாவட்டத்தில் ரவிகரனுக்குமே செல்வாக்கு உண்டு. கட்சியின் செல்வாக்கினைத் தான் அவர் நம்பியிருக்க வேண்டும்.
சுமந்திரன் மீது நம்பிக்கை
கொழும்பு மைய அரசியலுக்கு மீண்டும் அவர் திரும்பியுள்ளதால் தமிழ்த்தேசிய சக்திகள் அவருக்கு வாக்களிப்பர் எனக் கூற முடியாது. அவர் மனப்பூர்வமாக தமிழ்த்தேசிய அரசியல் நிலைப்பாட்டை எடுத்தால் சில மாற்றங்கள் வரலாம்.
எனினும் தமிழ்த்தேசிய சக்திகள் சுமந்திரன் மீது நம்பிக்கை வைப்பதற்கு கடந்தகால அனுபவங்கள் காரணமாக தயாராக இருப்பார்கள் எனக் கூறிவிட முடியாது.
புலம் பெயர் தமிழ்த் தேசியவாதி ஒருவர் சுமந்திரன் முதலமைச்சராக வருவதை விட தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வருவது நல்லது எனக் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கக் கட்சி சிறிது காலத்திலேயே அம்பலப்பட்டு விடும். அக்கட்சியினால் தமிழ்த்தேசிய அரசியலை அழிக்க முடியாது.
ஆனால் சுமந்திரன் கொழும்பு மைய அரசியலை நடாத்துவதால் பெருந்தேசியவாதத்திற்குள் கரைய வேண்டிய நிலை ஏற்படும் என அந்த புலம் பெயர் தமிழ்த் தேசியவாதி கூறியிருந்தார். சர்வதேசரீதியாக பொறுப்புக் கூறல் செயல்பாட்டை நீர்த்துப்போக செய்தது சுமந்திரன் தான் என்பது அவரது வாதம்.
இரண்டாவது கஜேந்திரகுமாரை தனிமைப்படுத்தலாகும். தமிழ்த் தேசிய முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையேயான ஒப்பந்தம் தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தி தற்காப்பு நிலைக்கு தள்ளியது. இதனால் சிறிது காலம் தமிழரசு கட்சி ஆடிப் போயிருந்தது. இதனை எப்படியாவது குழப்பதற்கு சுமந்திரன் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்.
நல்லாட்சிக் கால தீர்வு
மாகாண சபைத் தேர்தலுக்கான ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அக்கட்சிக்குமிடையே முரண்பாட்டை ஏற்படுத்தியமையினால் அது வாய்ப்பான சூழலை உருவாக்கிக் கொடுத்தது. இது முன்னணிக்கும் தெரியும்.
முன்னணி கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நடவடிக்கைகளை அதனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. முகத்திற்கு நேராகவே நீங்கள் விலகி விட்டதாக கருதுகின்றோம் எனக் கூறியிருந்தது.
தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது எனினும் கொள்கை உறுதிப்பாடு தம்மைப் பாதுகாக்கும் என நம்பிக்கை கொண்டிருக்கின்றது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கூட்டிற்கு சென்றபோதே அந்தக் கூட்டு நிலைத்திருக்கும் என அது பெரிய நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை. தமிழரசுக் கட்சிககோ ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது.
குறுக்கு வழிகளிலாவது தேர்தலில் வெல்வது என்பதே அவற்றின் இலக்காக உள்ளது. மூன்றாவது நல்லாட்சிக் கால “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனையைப் பலப்படுத்துதலாகும். ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போதும் சுமந்திரன் அதனையே வற்புறுத்தியிருந்தார்.
ஜனாதிபதியிடம் நல்லாட்சிக் கால தீர்வு முயற்சிகளின் போது நீங்கள் உடன்பட்ட விடயங்களிலிருந்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம் எனக் கூறியிருந்தார். இதனை இலகுபடுத்துவதற்காகவே பதில் தலைவர் சிவஞ்ஞானமும் சமஸ்டி என்ற பெயர் முக்கியமில்லை உள்ளடக்கம் தான் முக்கியம் எனவும் கூறியிருந்தார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு அரசியல் தீர்வு தொடர்பாக உறுதியான நிலைப்பாடு எதுவும் கிடையாது. இதனால் சுமந்திரனின் ஏக்கியராச்சிய தீர்வு யோசனையை அது ஒரு போதும் எதிர்க்கப் போவதில்லை. அதனுடைய கவனம் எல்லாம் தமிழரசுக் கட்சியின் தாழ் வாரத்தில் ஏதாவது இடம் கிடைத்தால் போதும் என்பதே.
முன்னர் வாழையிலையில் சாப்பிட வேண்டும் என்பதில் அடம்பிடித்தது. தற்போது உணவு தந்தால் போதும் என்ற நிலையில் இருப்பது போலவே தெரிகின்றது. சுயாதீனமான இருப்பு எதுவும் அக்கூட்டணிக்குக் கூட்டணிக்கு கிடையாது. வீட்டின் தாழ்வாரத்தில் அல்லது சைக்கிள்களின் தாழ்வாரத்தில் ஒதுங்குவதைத் தவிர அதற்கு வேறு தெரிவு இல்லை. தற்போது சைக்கிள் அணைப்பதற்கு தயாராக இல்லை.
சங்குடன் கூட்டு
அதனால் வீட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்க முற்படுகின்றது. வீட்டின் தாழ்வாரம் கொஞ்சம் பெரிதாக இருப்பதால் வீடா? சைக்கிளா? என்றால் அதன் தெரிவு வீடாகத் தான் இருக்கும்.
மாகாண சபைத் தேர்தலில் ஒரு சில ஆசனங்களையாவது பெறாவிடின் தன் இருப்பைப் பேணுவது கஸ்டம் என்பதும் அதற்கு தெரியும். நான்காவது சைக்கிள் - சங்கு கூட்டினால் தமிழரசுக் கட்சி தற்காப்பு நிலைக்கு செல்ல வேண்டியிருந்தது.
தற்போது சங்குடன் கூட்டுச் சேர்ந்ததால் அது தாக்குதல் நிலைக்குச் செல்ல முற்படுகின்றது. அதற்கு உள்ள அச்சமெல்லாம் சைக்கிள்காரர் தங்களை ஒற்றையாட்சிக் கட்சிக்காரர் என முத்திரை குத்தி விடுவார்கள் என்பதே! ஏக்கியராச்சிய நிராகரிப்பை சைக்கிள் கட்சி தற்போது சர்வதேச மயப்படுத்த முற்படுவதும் அதற்கு இடைஞ்சல் கொடுக்கின்றது.

தமிழ்த் தேசிய பேரவை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தபோதும் ஏக்கியராச்சிய நிராகரிப்புக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சங்குக் கூட்டணியினர் இந்த அச்சத்தினால் ஏக்கியராச்சிய தீர்வு வரப் போவதில்லை என கூறப் பார்க்கின்றனர். சித்தார்த்தன் அறிக்கை மூலம் அதனை வெளிப்படுத்தியிருந்தார்.
அது பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை எனக் கூறியிருக்கின்றார். இந்தப் பேச்சுவார்த்தை மூலம் சங்குக் கூட்டணியினரும் சில வியூகங்களை முன்வைத்து செயல்பட முனைகின்றனர். அதில் முதலாவது மாகாண தேர்தலின் போது தமது வேட்பாளர்களை அதிகரிப்பதற்கு பேரம் பேசுவதாகும்.
சைக்கிளின் கதவு மூடியிருப்பதால் இந்தப் பேரம் பேசல் எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் எனக் கூற முடியாது. சைக்கிள்களின் கதவு திறந்திருந்தால் பேரம் பேசல் வலுவாக இருந்திருக்கும்.
இரண்டாவது தனது ஆதரவுத் தளத்தை சற்று உயர்த்துவதாகும். சங்கு கூட்டணியில் சித்தார்த்தனுக்கு மட்டும்தான் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியான ஆதரவுத் தளம் உண்டு.
மாகாண சபைத் தேர்தலில் அவர் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை. இதனால் ஆதரவுத் தளம் ஆதரிக்கும் எனக் கூறுவது கடினம். வன்னி மாவட்டத்தில் சிவசக்தி ஆனந்தனுக்கும், செல்வம் அடைக்கலநாதனுக்கும் சிறிய ஆதரவுத் தளம் உண்டு. எனவே ஆதரவுத்தளம் அபரிதமாகும் எனக் கூறுவது கடினம்.
மாகாண சபைத் தேர்தல்
பேச்சுவார்த்தையில் மாகாண சபைத் தேர்தலுக்கு அழுத்தம் கொடுப்பது அரசியல் தீர்வில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்கின்ற தீர்மானங்களை எடுத்தாலும் அதற்கான செயல் திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை.
சுமந்திரன் சிங்களக் கட்சிகளையும் இணைத்து ஜனவரியில் மாகாண சபைத் தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
மக்களை இணைத்து போராட்டங்களை நடாத்தும் வலு அதற்கு இருப்பதாகத் தெரியவில்லை. அக் கட்சிகள் மக்களைத் திரளாக்கும் ஆற்றல் கொண்டவையல்ல.

டித்வா புயல் பேரிடரும் இவர்களது மக்கள் இயக்க முயற்சிகளை பலவீனப்படுத்தும். வேண்டுமானால் சில கூட்டங்களை மட்டும் அவர்களினால் நடத்தக்கூடியதாக இருக்கும்.
அரசியல் தீர்வு தொடர்பிலும் எத்தகைய அரசியல் தீர்வு என்பது தொடர்பில் எந்தவித உரையாடலும் இடம்பெறவில்லை. உரையாடல் தொடர்பான அக்கறையும் அவற்றிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது தமிழ்த் தேசியப் பேரவையின் தமிழ்நாட்டுப் பயணம் அவர்கள் மத்தியிலும் சலசலப்பினை உருவாக்கியுள்ளது.
தமிழரசுக் கட்சி தற்போது இந்தியத் தூதுவருடன் பேசுவதற்கு முயற்சிகளைச் செய்கின்றது. கூட்டாகப் பயணிப்பது மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருப்பதால் கூட்டாகச் சந்திப்பதற்கே முயற்சிப்பது போலத் தெரிகின்றது. வரும் செவ்வாய்க்கிழமை சந்திப்பு நடைபெற இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
தேர்தல் பிரச்சாரம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் எதிர்காலத்தில் வியூகங்களை அமைத்து செயல்படுவதற்கே முயற்சிக்கும். தமிழ்நாட்டுப் பயணமும் அந்த முயற்சிகளில் ஒன்றுதான். நீண்ட காலத்திற்கு பின்னர் தமிழ்க் கட்சி ஒன்றினால் அந்த முயற்சி எடுக்கப்பட்டது பாராட்டப்படக்கூடியதே.
தமிழ்நாடு முதலமைச்சரை சந்திப்பது என்பது இலகுவான ஒன்றல்ல. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் என்போர் தமிழ்நாடு சென்ற போதும் சந்திக்க முடியவில்லை. கூட்டத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து சந்திக்க மட்டும் தான் அவர்களினால் முடிந்தது.

தி.மு.க.வுடன் நெருக்கமான அரசியல்வாதியின் தொடர்பு இதற்கு வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் இச்சந்திப்பினை இலகுவாக மேற்கொள்ள முன்னணியினால் முடிந்தது. திருமாவளவன் அதற்கேற்ற ஒழுங்குகளைச் செய்திருந்தார்.
தேர்தல் காலமானபடியால் இவர்களின் கோரிக்கைகள் தேர்தல் பிரச்சாரங்களிலும் பிரதிபலிக்கக் கூடும். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தினால் தமிழ்நாடு அரசியல் களம் சற்று போட்டியாக இருக்கும் போலவே தெரிகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சரிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இறைமை, சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டிக் கோரிக்கை, ஏக்கியராச்சிய தீர்வு யோசனை நிராகரிப்பு, தமிழக மீனவர் ஊடுருவல் பிரச்சினைத் தீர்த்தல் என்பவற்றை முன்வைத்துள்ளது.
கோரிக்கைகள் எழுத்து வடிவிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை நிச்சயமாக தாக்கத்தை செலுத்தக்கூடியவையாக இருக்கும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்து தி.மு.க. வைச் சந்திக்காமல் ஏனைய தமிழ்நாட்டு கட்சிகளையும் சந்தித்து ஆதரவு கேட்பதே ஆரோக்கியமாக இருக்கும்.
வரும் நாட்களில் அதனையும் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். தமிழ்நாட்டின் ஆதரவில்லாமல் இந்திய மத்திய அரசிற்கு வலுவான அழுத்தங்களை ஒருபோதும் கொடுக்க முடியாது தமிழ் மக்கள் சார்ந்த புவிசார் அரசியலின் திறவு கோலாக சென்னை வளர்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு.
ஈழத் தமிழர் அரசியல்
அதேபோல தமிழ் நாட்டின் கட்சி அரசியலுக்குள் ஈழத் தமிழர் அரசியல் மாட்டுப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் அவசியமானதாகும்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்நாட்டு பயணத்துடன் தாக்குதல் நிலைக்கு முன்னெறிச் சென்றுள்ளது எனலாம். அதேவேளை கூட்டாகச் செயற்படுவதை மக்கள் விரும்புவதால் தமிழ்த் தேசியப் பேரவையை வலுப்படுத்துவது பற்றியும் எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முனைப்பு காட்டலாம்.

அண்மைக்காலமாக அந்த முனைப்பு பலவீனமாகவே இருக்கின்றது. தவிர சிவில் அமைப்புகளுடனான அதன் உறவையும் பலப்படுத்த முனையலாம்.
ஏற்கனவே டில்கா விடுதியில் இடம் பெற்ற கலந்துரையாடல் மூலம் அதற்கான ஆரம்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சிவில் அமைப்புக்களுக்கும் சில பொறுப்புக்கள் உள்ளன. தமிழ்த் தேசிய அரசியலை தமிழ் அரசியல் கட்சிகள் வினைத்திறனுடன் முன் கொண்டு செல்லும் என எதிர்பார்க்க முடியாது. எனவே சிவில் அமைப்புகள் சில முன் கையெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையும் அதனை அடைவதற்கான வழி வரைபடத்தையும் தெளிவாக முன்வைத்து பேசு பொருளாக்குவது அதன் பிரதான பணியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ரூ.2.35 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க கிரீடம்: புகைப்படம் எடுக்க முயன்று தட்டிவிட்ட சிறுவன்: வீடியோ News Lankasri