அரசாங்கத்தின் புதிய சட்டமூலங்களுக்கு எதிராகக் களமிறங்க தமிழரசுக் கட்சி அழைப்பு
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுமக்களுக்கு அழைப்பு
கொழும்பில் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக தற்போதைய அரசாங்கம் இரண்டு தனித்தனி சட்டமூலங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.
முன்மொழியப்பட்டுள்ள இரண்டு சட்டமூலங்களிலும், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த இரண்டு சட்டமூலங்களும் நிறைவேற்றப்பட்டால், அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களால் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவதைத் தடுப்பதற்கு மக்கள் போராட்டங்கள் அவசியம் என வலியுறுத்திய சுமந்திரன், அதற்கான கால அவகாசம் குறைவாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, குறித்த இரண்டு சட்டமூலங்களுக்கும் எதிராக நாடளாவிய ரீதியில் பரந்துபட்ட மற்றும் வலுவான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.