சஜித்திற்கு நாடாளுமன்றிற்கு வெளியே கோவிட் தொற்று ஏற்பட்டதில் உண்மையில்லை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு நாடாளுமன்றிற்கு வெளியேயே கோவிட்-19 நோய்த் தொற்று உறுதியானது என்பதில் உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் கோவிட் தொற்றுறுதிகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 18ம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் நடாத்தப்பட்டிருக்காவிட்டால் சஜித்திற்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை நிறைவேற்றும் நோக்கில் நாடாளுமன்றைக் கூட்டியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்குமாறு சஜித் பிரேமதாச, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரிய போதிலும் அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திற்கு நாடாளுமன்றிற்கு வெளியே கோவிட் தொற்று ஏற்பட்டது என சபாநாயகர் தரப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் லக்ஸ்மன் கிரியல்ல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.