பாடசாலை மாணவர் சமூகத்தை பாதுகாக்க முக்கிய தீர்மானம்
பாடசாலை மாணவர்கள் மத்தியில் குழு மோதல்களை உருவாக்குவது போதைப்பொருள் வியாபாரிகளாக இருக்கலாம் எனவும் இவ்வாறான நிலையில் மாணவர் சமூகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல் தொடரபான விடயம் பேசப்படும்போது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் குழு மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் அறியப்பட்டு ஆய்வுகள் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆராயப்பட்டதில் மாணவ குழுக்களாக பிரிக்கப்பட்டு குழு மோதல்கள் ஏற்படுத்தப்படுவது போதைப்பொருள் வியாபாரத்திற்கான உத்தியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இவ்வாறு குழுக்களாக மாணவ பருவத்தினர் கூடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களிற்கு செல்லும் மாணவர்கள் பாடம் இடம்பெறாத சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஒன்று கூடுவதாகவும்,, ஏனைய மாணவ பருவத்தினரும் இவ்வாறு கூடுவதற்கான சூழல் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
இதில் அதிகளவில் பாடசாலை இடைவிலகல் மாணவர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதனை தடுப்பதற்கான பல்வேறு கள ஆய்வுகள் இடம்பெற்றுள்ளதாக சபையில் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான மாணவர்களின் பெற்றோர் தமது கௌரவத்திற்காக மறைக்க விரும்புவதாகவும், ஏற்பட்ட சேதங்களிற்கான செலவீனங்களை பொறுப்பேற்று குடும்ப கௌரவத்திற்கான தகவல் வெளியே செல்ல விடாது தடுப்பாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் அதனை தடுப்பதற்கு பொலிஸார் மற்றம் சிறுவர் சார் விடயங்களை கையாளும் உத்தியோகத்தர்கள் பாடசாலை சமூகத்துடன் இணைந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை, பாடசாலை இடைவிலகல் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பெற்றோரை அழைத்து முதல் கட்டமான விழிப்புணர்வு செயற்பாடுகளையும், ஆய்வுகளையும் மேற்கொள்ள இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, போதைபொருட்கள் யாழில் அதிக பயன்பாட்டில் உள்ளதாகவும், சுண்டிக்குளம், வடமராட்சி கிழக்கு ஊடாக கிளிநொச்சிக்கு கடத்தப்பட்டு வியாபாரம் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதனை கட்டுப்படுத்துவதற்கு இரு வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.







Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
