சபாநாயகர் பொய்யர் என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது:சமிந்த விஜேசிறி
அமைச்சர்கள் சட்ட ரீதியாக பதவி விலக வில்லை எனவும் அவர்கள் பதவி விலகியதாக கருதி சபாநாயகர் செயற்படுவது தவறு எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அனுர பிரியதர்ஷன யாப்பா, அமைச்சர்கள் சட்டரீதியாக பதவி விலகவில்லை என்ற முக்கியமான விடயத்தை கூறினார். சபாநாயகர் நீங்களும் பொய்யர் என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது.
47 ஷரத்திற்கு அமைய அமைச்சர்கள் சட்ட ரீதியாக பதவி விலகவில்லை. அமைச்சர்கள் தமது பதவி விலகல் கடித்தை ஜனாதிபதியிடம் கையளிக்கவில்லை. இதனால், அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இல்லை என்று கருதி சபாநாயகர் செயற்படுவது மிகவும் தவறானது.
அமைச்சர்கள் பதவி விலகி இருப்பது குறித்து ஜனாதிபதி சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவிக்கவில்லை. 47 ஷரத்திற்கு அமைய அமைச்சர்கள் பதவி விலகல் கடித்தை ஜனாதிபதியிடம் கையளிக்கலாம்.
ஆனால், அவர்கள் கையளிக்கவில்லை. இதனால், அவர்கள் பதவி விலகவில்லை. சட்ட ரீதியாக அமைச்சர்கள் விலகாத போது மக்களிடம் அடிவாங்குவதை தவிர்க்க அமைச்சர்கள் பதவி விலகியுள்ளதாக கூறினாலும் சபாநாயகர் என்ற வகையில்,அவர்கள் பதவி விலகியதாக கருதி செயற்படுவது தவறு.
இதனால், கௌரவ பிரதமர் அவர்களே நாட்டு மக்கள் என்ன கேட்கின்றனர் என்பதை சஜித் பிரேமதாச தெளிவாக கூறினார். பிரதமரின் மெதமுலன வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் போது அந்த துயரத்தை பிரதமர் உணர்ந்திருப்பார்.
மக்களின் நிலைப்பாட்டை நோக்கி செல்லும் வேலைத்திட்டத்தை உருவாக்கி விட்டு, ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என சமிந்த விஜேசிறி கூறியுள்ளார்.