நாடாளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசாரரின் காவியுடை! ஆளும் தரப்பை பார்த்து கேட்கப்பட்ட மோசமான கேள்வி..
இந்த அரசாங்கம் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடையை தொட்டதையிட்டு வெட்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக மாதுகொட தெரிவித்துள்ளார்.
இன்றைய(06.10.2026) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்று நாம் ஒரு தேசமாக அனைவரும் வெட்கப்பட வேண்டும், கவலைப்பட வேண்டும். ஏனெனில் ஒரு தேரருடைய காவியுடை அரசாங்கத்தினால் களையப்பட்டிருக்கின்றது.
நீங்கள் ஆடை அணிந்திருக்கின்றீர்களா..?
ஊடகங்களின் வாயிலாக நாம் அறிந்த செய்திகளின் அடிப்படையில், சிறைத் தண்டனைப் பெற்றுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடைகள் அகற்றப்பட்டு அவருக்கு சிறைக் கைதிக்கான ஆடை வழங்கப்பட்டுள்ளது.
அவர் இழைத்த குற்றம், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து நாம் இங்கு விவாதிக்க வரவில்லை. அதேபோல அவருடைய சித்தாந்தங்கள் மற்றும் கருத்துக்கள் குறித்து பேசுவதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாகவும் நாங்கள் பயன்படுத்தவில்லை.

ஆனால், அவருடைய காவியுடை அகற்றப்பட்டமை குறித்து இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். ஒரு தேசமாக நாம் கவலைப்பட வேண்டும்.
இந்த அரசாங்கம் ஞானசாரரை மாத்திரம் அல்ல, அவர் அணிந்திருந்த காவியுடையையும் தொட்டிருக்கின்றது. எனவே, ஞானசாரரின் காவியுடை களையப்பட்டமை குறித்து நாம் எமது எதிர்ப்பினை வெளியிடுகின்றோம்.
இலங்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மகா சங்கத்தினர் பாதுகாத்து வந்துள்ள அந்த மகத்தான பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் காவியுடையை, வெறும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தை வைத்திருக்கும் நீங்கள் தொட்டுப் பார்க்க முடியுமா..?

அந்த புனிதமிக்க காவியுடையை தொடுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கின்றதா? காவியுடையைத் தொடுவதற்குரிய அதிகாரம் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினருக்கே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஞானசார தேரரின் காவியுடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட உங்களிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன்.
''நீங்கள் ஆடை அணிந்திருக்கின்றீர்களா..? உங்களுக்கு வெட்கம் என்ற ஒன்று இருக்கின்றதா..?'' எனவும் ஜானக மாதுகொட எம்.பி. இதன்போது கேள்வி எழுப்பினார்.