இஸ்ரேலின் காசா மீதான போரில் ஈழத் தமிழர்கள்
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர்ப் பிரகடனம் செய்து போரை முன்னெடுக்கின்றது.
ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீனை விடுதலை பெறச் செய்வதற்காக போராடுகின்றனர். பாலஸ்தீனர்களிலிருந்து தோன்றிய விடுதலை அமைப்பு ஹமாஸ் ஆகும். காசா என்பது பாலஸ்தீன் நாட்டின் ஒரு பகுதி. இஸ்ரேல் ஒரு அரசாங்கம்.
இரு தரப்பினருக்கும் முடிவில்லாது நீளும் போர் எரிமலை போல் அவ்வப்போது பெரிதாக வெடித்து எரிந்திருக்கிறது.இப்போது மீண்டும் எரிகிறது.
இஸ்ரேல் எவ்வாறு தோன்றியது?
இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக நாடற்றவர்களாக உலகமெல்லாம் அலைந்து திரிந்த இனம். பல கொடுந் துயரங்களை எதிர் கொண்டு வெந்து நின்ற இனம். ஹிட்லரால் அறுபது இலட்சம் யூதர்கள் திட்டமிட்டே கொல்லப்பட்ட அவலம் பார்த்த இனம் தான் யூத இனம். ஹிட்லரின் வதைமுகாம் என்ற நூலில் எழுத்தாளர் மருதன் யூதர்கள் சுமந்த வலிகளை நுணுக்கமாக எடுத்துரைத்திருப்பதை நோக்கலாம்.
உலகில் எல்லா இடங்களிலும் இருந்த புத்திசாலிகளில் இஸ்ரேலியர்களே அதிகமாக இருந்தனர். ஹிட்லரது ஆய்வு கூடங்களில் கூட அதிகமான இஸ்ரேலியர்கள் இருந்தனர்.
ஹிட்லர் யூதர்களுக்கெதிரான களையெடுப்பு உத்தியை கையாள ஆரம்பித்த போது தான் அவர்கள் ஹிட்லரை விட்டு விலகி தப்பிச் சென்றனர். அவர்கள் தப்பிச் செல்ல ஹிட்லர் வாய்ப்பளித்ததும் நடந்தேறியதை வரலாற்றுத் தடத்தில் அவதானிக்கலாம். அப்படி தப்பிச் சென்றவர் தான் உலகின் முதல் அணுகுண்டை கண்டறிந்து வடிவமைத்து தந்த வரும் 21ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் மற்றும் சார்பியல் கோட்பாட்டை தந்த அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகும்.
இன்றைய நவீன உலகின் மிகப்பெரிய மாற்றங்களுக்கு காரணமானவர்களுள் ஐன்ஸ்டீனும் ஒருவர்.
விடுதலை நோக்கிய நேர்த்தியான திட்டமிடலோடு பயனப்பட்டு எடுத்துக்கொண்ட பொருத்தமான முடிவுகளால் வெற்றிபெற்று இஸ்ரேல் என்ற நாட்டை கட்டமைத்து கண்டு கொண்டனர்.நாடு தோன்ற முன்னரே நாட்டுக்கான அரசை கட்டமைத்திருத்ததோடு தமக்கான புலனாய்வு கட்டமைப்பையும் சிறப்பாக செயற்படும் வகையில் யூதர்கள் நிறுவிக் கொண்டனர்.
இரண்டாம் உலகப்போரின் முடிவில் பல காலனித்துவ நாடுகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளுக்கும் நிலங்களுக்கும் சுதந்திரத்தை கொடுத்திருந்தன. அப்போது அதனால் அதிகமாக அடிமைப்பட்டிருந்த நாடுகள் சுதந்திரம் அடைந்ததோடு புதிய தேசங்களும் தோன்றியிருந்தன.
இந்திய பெருநிலப்பரப்பு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறும் போது பாகிஸ்தானை தனிநாடாக அங்கிகரிக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையினால் இன்றைய பாகிஸ்தான் தோன்றியிருந்தது.
பின்னாட்களில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களது தலையீட்டால் கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாகி வங்காளதேசம் ஆனது. இந்தியாவை அன்னியர் கைப்பற்றியபோது பாகிஸ்தான் இல்லை. ஆனாலும் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கிய போது பாகிஸ்தான் மக்களது கோரிக்கை செவிசாய்க்கப்பட்டு புதிய நாடு தோன்றியது.
கிழக்கு பாகிஸ்தானின் கட்டுப்பாடு மேற்கு பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்டது.இது இந்தியாவுக்கு நெருக்கடியான சூழலை தோற்றுவித்தது.கிழக்கு பாகிஸ்தானியர் தாம் பிரித்து சென்று தனியலகாக செயற்பட விரும்பினார்கள்.இந்திய அணுசரையை இலகுவாக பெற்றுக்கொண்டு இந்திய தலையீட்டால் தனியலகாக பிரிந்தார்கள்.ஆயினும் அவர்கள் இந்திய ஆதிக்கத்திற்குள் ஒரு மானிலமாக இயங்காது தனிநாடாக செயற்பட தாயாராகி இன்று வங்காளதேசம் என்ற நாடாக இருப்பதனை அவதானிக்கலாம்.
இஸ்ரேல் இந்த இரு முறைகளில் தனக்கான நாட்டை கட்டமைக்கவில்லை. மாறாக நிலமில்லாத நாடாக முதலில் தன்னை தகவமைத்து செயற்பட ஆரம்பித்தது. 2009 இற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவிக் கொண்டது போல்.
உலக அரங்கில் எங்கெல்லாம் இஸ்ரேலியர்கள் வரவேற்கப்பட்டார்களோ அங்கெல்லாம் இஸ்ரேலியர்கள் தங்கள் உயர் ஆற்றலை வெளிப்படுத்தி அந்த நாடுகளின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டு தங்கள் தனி நாட்டுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
இன்றைய இஸ்ரேலுக்கான நிலத்தினை விலைகொடுத்து வாங்கியிருந்தார்கள்.அதற்காக அவர்கள் நிலவங்கி என்ற கட்டமைப்பை உருவாக்கி பாலஸ்தினில் வாழ்ந்த முஸ்லிம்களிடமிருந்து நிலம் வாங்க விரும்பும் இஸ்ரேலியர்களுக்கு தேவையானளவு கடனுதவிகளை வழங்கினார்கள்.வசதியான இஸ்ரேலியர்கள் தாங்களாகவே முன்வந்து நிலம் வாங்கியதோடு நில வங்கிக்கும் பணம் கொடுத்தார்கள்.எல்லாமே திட்டமிட்ட முறைக்கேற்ப நடந்து முடிந்திருந்தது.
இரண்டாம் உலகப்போரில் இஸ்ரேலியர்கள் அமெரிக்காவுக்கு வழங்கியிருந்த ஆதரவிற்கு அமெரிக்கா தன் நன்றியினை இஸ்ரேலியர்களுக்கான தனி நாடமைப்பதில் வழங்கிய ஆதரவினால் வெளிப்படுத்தி நின்றது என்று கருதலாம்.இஸ்ரேலியர்களின் அறிவாற்றலை தான் பயன்படுத்திக்கொள்ள முனைந்த அமெரிக்கா இஸ்ரேல் என்ற தனிநாடு தோற்றம் பெற பேராதரவை வழங்கியிருந்தது.மத்தியதரை பகுதியில் அமெரிக்க நட்பு நாடாக ஒரு நாடு வேண்டும்.அது இஸ்ரேலாக இருப்பது சாதகமானது என்ற மற்றொரு காரணமும் இங்கே நோக்கத்தக்கது.
முதலில் இஸ்ரேலை தனிநாடாகவும் அங்கிகரித்தும் இந்த அமெரிக்கா தான். தனிநாடாக தோன்றிய இஸ்ரேலை தோன்றிய நாள் முதல் சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகள் போர் கொண்டு துடைத்தழிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.
பாலஸ்தீன் நிலம்
மத்தியதரைக் கடலோடு சார்ந்த பெரு நிலப் பரப்பு முஸ்லிம்களின் நாடுகளால் நிரம்பியிருந்தது. பாலஸ்தீனம் ஒரு முஸ்லிம் நாடு. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தன்னில் ஒரு பகுதியை இழந்து போனது.இஸ்ரேல் என்ற நாடு தோன்றுவதற்காக. இஸ்ரேலியர்கள் நிலங்களை கொள்வனவு செய்யும் போது எந்தவொரு முஸ்லிமோ அல்லது முஸ்லிம் நாடுகளோ எண்ணியிருக்கமாட்டார்கள் நாடு ஒன்றுக்கான நிலத்தினை காசு கொடுத்து வாங்கிவிட இஸ்ரேலியர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று. ஆனாலும் நடந்தது அதுதான்.
போராடி நாடமைக்கும் செயற்பாட்டில் இஸ்ரேல் ஆடிய போர் வேறுவிதமாக இருந்திருக்கிறது.ஆயுதம் ஏந்தியோ அல்லது அகிம்சை முறையிலோ இஸ்ரேல் போராடவில்லை.பாலஸ்தீனியர்களின் வறுமையை தனக்கு சாதகமாக மாற்றி நாடமைப்பதற்கான வழியை கண்டு வென்று விட்டது. நாட்டை தற்காத்துக் கொள்ளவே இஸ்ரேல் தன் இராணுவத்தை பயன்படுத்த வேண்டியிருப்பது வழமையான உலக ஒழுங்குக்கு மாறானது.
எண்ணை வளத்தால் வளமான தேசங்களாக இருந்த முஸ்லிம் நாடுகள் பாலஸ்தீனியர்கள் வறுமையால் தங்கள் நிலங்களை விற்கும் போதும் அவ்வாறான நில விற்பனையால் தொடர் நிலப்பகுதி ஒரு தனித்தேசிய அடையாளத்தோடு கூடிய ஒரு இனத்தவர்களிடம் சேரும் போதும் கண்டுகொள்ளவில்லை. இன்று பாலஸ்தீன் விடுதலைக்கென போராடும் போராளி அமைப்புக்களும் அன்று இவற்றைப் பற்றி சிந்திக்கத் தலைப்படவில்லை.அதுமட்டுமல்ல இன்று பாலஸ்தீன் என்ற நிலத்தின் மொத்தப் பரப்பும் இஸ்ரேலியர்களிடம் இல்லை.மொத்த பாலஸ்தீன் நிலப்பரப்பில் ஒரு பகுதி மட்டுமே இஸ்ரேலின் தோற்றத்துக்காக பயன்பட்டுள்ளது.
பறிபோன நிலத்துக்கு போராடும் போது இப்போதுள்ள நிலத்தில் வாழும் மக்களையும் அந்த நாட்டினையும் வலுவான பொருளாதார வல்லரசாக மாற்றிக்கொள்ள முயல்வதில் கவனம் இல்லாதிருக்கின்றனர்.
இஸ்ரேலின் இன்றுள்ள நிலையை கருத்திலெடுத்து அதற்கு நிகராக மீதமுள்ள நிலத்திலமைந்த பாலஸ்தீனை கட்டியமைத்திருக்கலாம்.அது விடுத்து இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை அழித்தொழிப்பதற்கு எண்ணுவது தானும் வாழாமல் மற்றவரையும் வாழ விடாமல் இருக்கும் போக்கை வெளிக் காடியிருக்கின்றனர்.உலகப் பரப்பில் 27 முஸ்லிம் தனிநாடுகள் இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
யாசீர் அரபாத் என்ற ஆற்றல் மிக்க கெரில்லாப் போராளித் தலைவர் ஒருவரும் பாலஸ்தீனுக்காக விடுதலை வேண்டி போராடியிருந்தார்.அவர் பின்னாளில் ஐநா சபையில் பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்ட பாலஸ்தீனுக்காக கலந்து கொண்டிருந்ததோடு அமைத்திக்கான பரிசில்களையும் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியதொரு தேசத்திற்காக பாலஸ்தீனின் பகுதிகள் சூறையாடப்பட்டன என்பது உலகளவில் பேசப்படுகின்ற போதும் பாலஸ்தீனியர்கள் அந்த நிலங்களை தங்கள் வறுமையால் இழந்தார்கள் என்பதையோ அன்றைய சூழலில் பாலஸ்தீன் வலுவான நாடாக தம் நாட்டை பாதுக்காக்க தீர்க்கதரிசனம் மிக்க தீர்மானங்களை கொண்டிருக்கவும் இல்லை என்பதை பேச மறந்து விடுகின்றனர்.
ஒரு வேளை இஸ்ரேல் தனக்கான நாட்டினை எங்கே அமைப்பது என்ற தீர்மானத்தை முன்வைத்து அதற்கான ஏதுக்களை ஆராயும் போது பாலஸ்தீனம் வலுவான நாடாக இருந்திருக்குமானால் யூதர்கள் வேறொரு இடத்தை தேர்வு செய்திருக்க கூடும் என்பதை நிலமெல்லாம் இரத்தம் என்ற தன் ஆய்வு நூலில் எழுதாளர் பா.ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை
யூதர்கள் தங்கள் தாய் நாட்டுக்காக செய்து கொள்ளும் தியாகங்கள் அளப்பரியது.
ஹமாஸ் போராளிகளின் இஸ்ரேல் மீது மேற்கொண்ட அதிரடியான திடீர் தாக்குதலையடுத்து இஸ்ரேல் காசா மீது போரை அறிவித்தது. அதன் போரியல் நடவடிக்கைகளுக்கு தங்களாலான உதவிகளை வழங்குவதற்காக உலகமெல்லாம் பரந்து வாழும் மற்றும் பயனப்பட்டுக் கொண்டிருந்த யூதர்கள் தங்கள் வழமையான எல்லாப் பணிகளையும் கைவிட்டு விட்டு தாய் நாட்டுக்காக போராடுவதே தங்கள் முதன்மையான கடமையென அணிதிரள்வதனை காணலாம்.
இவ்வாறு இஸ்ரேலுக்கு திரும்பும் இஸ்ரேலியர்களை செவ்வி கண்டிருந்தது பிபிசி தமிழ் தொலைக்காட்சி சேவை.அதனை அது ஒலி ஒளி பரப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறு எல்லைக்கு இராணுவப் பணிக்காக திரும்பும் இஸ்ரேலியர்களது வாகனங்கள் காசா எல்லையருகே வீதிகளில் நிறுத்தப்பட்டிருப்பதனையும் குறிப்பிட வேண்டும்.
இந்த இயல்பு வேறெந்த நாட்டு மக்களிடமும் இஸ்ரேலியர்களளவுக்கு இருந்து விடாது என்பது திண்ணம்.அது போலவே தன் குடிமக்களுக்காக இஸ்ரேல் கொடுக்கும் முக்கியத்துவம் என்பதும் கனதியானதே!
ஒரு ஐயன்பாம் தொழிற்பாட்டுக்கான செலவு பெரும் தொகையாக இருக்கின்ற போதும் இஸ்ரேலிய குடி மக்களது உயிர்களை விட இதுவொன்றும் பெரிய செலவாகிவிடப் போவதில்லை என்ற உள்ளார்ந்த எண்ணக்கருவை வெளிப்படுத்தியவாறு செயற்படுவதும் இஸ்ரேலியர்களது நலன்களில் கூடிய கரிசனை காட்டுவதும் தெளிவாக பார்த்து அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
தன் இனம், மொழி, மதம், கலாச்சாரம் என்று எல்லாவற்றுக்கும் முன்னுரிமையளித்து நாடெனும் வீடாக இஸ்ரேல் வாழ்வதுபோல் மற்றொரு நாட்டினை காண்பதரிது.
இந்த இஸ்ரேல் போல் பாலஸ்தீனர்கள் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.அதிரடியாக இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து பெறப்படும் வெற்றியின் பின் காசா மக்கள் சுமக்கும் துயரங்களுக்காக இஸ்ரேலை சாடுவது தானே தன் கண்ணை குத்திவிட்டு முன் நின்றவர் மீதே குற்றம் சாட்டுவது போன்றதாகிவிடும்.
ஈழத்தமிழர்
ஈழம் என்று தமிழர்களால் அழைக்கப்படும் இன்றைய இலங்கையின் முதல் குடிகள் தமிழர்கள் தான் என்பது வரலாறு வழி கண்டுகொண்ட உண்மை.
சிங்கள மேலாதிக்கம் நிலங்களை கையகப்படுத்தி தன் பூர்வீகமாகக் கொண்டு இலங்கையை பௌத்த சிங்கள நாடாக இன்றைய உலகுக்கு காட்டுவதில் வெற்றி பெற்றுச் செல்கின்றது.
இது தொடர்ந்து சென்றால் இலங்கையில் தமிழர் தான் பூர்வீக குடிகள்.இருந்தும் இப்போது சிங்களவர்கள் தான் என்று வரலாற்றை மட்டுமே படிக்க முடியும்.இதனால் தமிழர்கள் இலங்கையில் இருந்து மறைந்து போய்விடுவார்கள்.அல்லது மறைக்கப்பட்டு விடுவார்கள்.
அமெரிக்காவில் பூர்வீக குடிகள் செவ்விந்தியர்கள்.இருந்தும் செவ்விந்தியர்களுக்கொரு தனி நாடு உலகில் இல்லை என்பது போல.
இங்கே இருபது என்பது வேறு. நிலைத்திருப்பது வேறு.
சார்ள்ஸ் டார்வினின் கூர்ப்பியல் கோட்பாடுகளின் படி தக்கன பிழைத்தால் என்பதுவே யதார்த்தமானதாக இருப்பதை புரிந்து நடந்துகொள்ள தமிழர்கள் மறந்து போவது தான் கவலைக்குரிய விடயமாகும்.
ரஷ்யாவும் சீனாவும் இந்தியாவும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் போன்ற வல்லரசு நாடுகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில் போட்டி போட்டுக் கொள்கின்றன.
ஆயுத பலம்,அறிவியல், பொருளாதார பலம் என எல்லா வாழ்வியலுக்கான துறைகளிலும் சாதித்தலே முதன்மையான விடயமாக அவை தம் கொள்கை வகுப்புக்களை செய்திருப்பதையும் நோக்க வேண்டும்.
அந்த வழியில் தான் இஸ்ரேலும் தன்னை தகவமைத்து நடந்து செல்கின்றது.
பாலஸ்தீனர்கள் போல ஈழத் தமிழரும் தங்கள் வாழ்வியல் நிலங்களை பறிகொடுத்து விட்டு தங்களுக்கான வாழ்வியல் தாயகத்தை அமைப்பதற்காக போராடி வருகின்றனர். இருந்ததை கொடுத்து விட்டு பின் மீண்டும் பெற்றுக்கொள்ள போராடும் போது பறித்தெடுத்தவர்கள் கொடுக்க மறுப்பது மட்டுமல்ல உண்மையைக் கூட புரிந்துகொண்டு மீதமிருப்பதையாவது தீண்டாது விடலாம் என்ற தார்மீக பொறுப்பு இல்லாமையை நோக்கல் பொருத்தமாகும்.
பறித்தவரும் பறி கொடுத்துவரும் இவ்வையகத்தில் தங்களுக்கான தனித்துவங்களைப் பேணி வாழவே விரும்புகின்றனர்.ஆயினும் அங்கே புரிந்துணர்வற்ற போக்கால் போர்கள் தங்களை அரங்கேற்றிக் கொள்கின்றன.
இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களிடம் இருந்து நிலங்களைப் பறித்து தமக்கான தேசத்தை ஆக்கியது போல் இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களது பூர்வீக நிலங்களை பறித்து தங்களுக்கான தேசத்தை கட்டமைத்துக் கொள்கின்றனர். செவ்விந்தியர்களை விரட்டி அமெரிக்காவை கட்டமைத்துக் கொண்டது போல்.
செவ்விந்தியர்களுக்கான ஒரு தாயகத்தை அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களுக்கான ஒரு தாயகத்தை இஸ்ரேலும் ஈழத்தமிழர்களுக்கான ஒரு தாயகத்தை சிங்களவர்களும் பகிர்ந்துகொண்டு சேர்ந்து வாழ்தல் ஏன் சாத்தியமற்றதாகிப் போகின்றது என்பது சிந்திக்கப்பட வேண்டிட ஒன்றாகும்.
பலம்பொருந்திய கூட்டத்தினர் நின்று நிலைத்திருப்பதையும் மற்றையவர்கள் இருப்பதையும் அவதானிக்கலாம்.
பாலஸ்தீனிய விடுதலை இயக்கங்கள் தங்களை பலமாக நிறுவிக் கொண்டு இஸ்ரேல் மீது போர் தொடுத்து தம் நிலங்களை மீட்டுக் கொண்டால் உலகம் தன் பார்வையை பாலஸ்தீனியர்கள் பக்கம் திருப்பிக்கொண்டு அவர்களால் தனக்குள்ள அனுகூலங்களை பெற முயற்சிக்கும்.இஸ்ரேலுக்காக பரிந்து கதைத்துக் கொள்ளும்.இப்போது இஸ்ரேலுக்காக அமெரிக்கா நிற்பது போல்
ஈழத்தமிழர் விடயத்தில் இஸ்ரேலலை சிங்கள அரசாங்கமாகவும் தமிழரை பாலஸ்தீனர்களாகவுமே பாவனை செய்யது கொள்ள முடியும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தான் பிறந்தது போல ஏன் இலங்கை சுதந்திரம் அடைந்த போது தமிழீழம் பிறந்திருக்க முடியாது?
இலங்கையின் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் வழங்கிய போது தமிழர்கள் தாங்கள் முன்னிருந்தது போலவே பிரிந்து தனித்து வாழக் கேட்டிருக்கலாம்.அப்போதிருந்த படித்த தமிழறிஞர்களின் அமைதியாக சேர்ந்து வாழும் எண்ணம் பின் வந்த தமிழர்களின் இருப்பையே கேள்விக்குரியதாக்கி விட்டது என்பது காலம் கடந்த உண்மையாகும்.
இஸ்ரேல் காசா போரில் ஈழத் தமிழரது நிலைப்பாடு
நடுநிலை வகித்து கடந்து போவதும் இன்றைய போரியல் ஏற்படுத்தும் சாதக பாதகங்களை உணர்ந்து பொருத்தமான முடிவுகளூடாக தாயகம் நோக்கிய பாதையில் பயனப்படுவதுமே ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழர்கள் எடுக்கக்கூடிய நல்ல முடிவாக அமையும்.
யூதர்களைப் போல் சூழலுக்கேற்ப சிந்தை கொண்டு தமிழர் தாயகத்தை உருவாக்குவதற்கான ஏதுக்களை ஆராய வேண்டும். இன்றுள்ள நிலை ஈழத்தமிழருக்கு பாலஸ்தீன் போலாவதால் இஸ்ரேலுக்கோ அன்றி பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளுக்கோ தமிழர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க முடியாது. காலம் தான் தமிழர்களுக்கு நல்ல பதிலை வழங்கும் என்பதில் ஐயமில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 19 October, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.