ஐ.நா. பொது செயலாளர் உடனடியாக பதவி விலக வேண்டும்....! இஸ்ரேல் கோரிக்கை
புதிய இணைப்பு
இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பில் ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்த கருத்துக்கு இஸ்ரேல் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், உடனடியாக அவர் பதவி விலகல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
காரணங்களின்றி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை தாக்கவில்லை, சர்வதேச மனித உரிமை சட்டம் போரில் மீறப்படுவது வருத்தம் அளிக்கின்றது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இவரின் குறித்த கருத்திற்கு இஸ்ரேலில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர்
இது தொடர்பாக, ஐ.நா.விற்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் தெரிவிக்கையில் ஹமாஸ் போராளிகள் தாக்குதலை ஐ.நா. பொதுச்செயலாளர் பொறுத்து கொண்டு நியாயப்படுத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என இஸ்ரேல் அமைச்சர் கோஹன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவிக்கையில், இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகின்றது.
சர்வதேச மனித உரிமை சட்டம் இப்போரில் மீறப்படுவது வருத்தம் அளிக்கின்றது. 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோரை வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவிற்கு இடம் பெயருமாறு தெரிவித்து, அங்கும் இஸ்ரேல் குண்டு வீசுகிறது.
56 ஆண்டுகளாக பலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு, உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணங்களின்றி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை தாக்கவில்லை.
ஹமாஸ் போராளிகளின் தாக்குதலுக்காக பலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையேயான தாக்குதலில் ஹமாஸ் படையின் துணை தளபதிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 19 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 35,000 ஹமாஸ் படை வீரர்கள் காசா பகுதியில் தற்போது இருப்பதாக ஹமாஸ் அரசியல் துறை உறுப்பினர் காஜி ஹமாத் தகவல் வழங்கியுள்ளார்.
துணைதளபதிகள்
இந்தநிலையில், தான் ஹமாஸ் படையின் துணை தளபதிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அப்துல் ரஹ்மான், கலீல் மஹ்ஜாஸ், மற்றும் கலீல் டெத்தாரி என்ற மூன்று துணைத் தளபதிகளே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய விமானப்படை தாக்குதலிலே துணைதளபதிகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இஸ்ரேலுடைய நோக்கம் காசாவின் நிலப்பரப்பை சிதைப்பதும் அங்குள்ள மக்களை கொன்றொழிப்பதுமாகவே இருக்கின்றது என பிரித்தானியா அரசியல் விமர்சகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.