பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம்: இஸ்ரேலின் முடிவை உற்றுநோக்கும் சர்வதேசம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயானா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹமாஸின் தற்போதைய அறிவிப்பானது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களை எதிர்த்து காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. காசாவின் முன்னணி தளபதிகளைக் குறிவைத்து இஸ்ரேலின் தாக்குதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக போரியல் வல்லுநர்கள் கருத்துரைத்துள்ளனர்.
தீவிரமடைந்துள்ள மோதல்
இதன் காரணமாக இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவின் மிகப்பெரிய வைத்தியசாலையான அல்-ஷிஃபா வைத்தியசாலையை சுற்றி தற்போது தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
மோதலுக்கு முன்னரே பல ஆயிரம் பேர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
காசா வைத்தியசாலைகள் கீழ் தான் ஹமாஸ் சுரங்கங்களின் முக்கிய கட்டுப்பாட்டு மையங்கள் காணப்படுவதாகவும், அதைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், ஹமாஸ் தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இஸ்ரேல் 5 நாட்கள் போர் நிறுத்தம் செய்யச் சம்மதித்தால் அதற்கு ஈடாக 70 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
“இந்த போர்நிறுத்தம் முழுமையான போர் நிறுத்தமாக இருக்க வேண்டும். காசாவில் எந்தவொரு பகுதியிலும் தாக்குதல் நடத்தப்படக் கூடாது. காசா முழுக்க உதவி பொருட்கள் செய்வதை அனுமதிக்க வேண்டும். இதற்குச் சம்மதித்தால் பணயக் கைதிகளை விடுவிக்க தயார்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இது குறித்து ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அபு உபைடா கூறுகையில்,
"போர் நிறுத்தம் குறித்தும் பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்தும் கட்டாரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது ஐந்து நாள் போர் நிறுத்தம் வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம்.
அதற்குப் பதிலாக 50 பேரை விடுவிக்கிறோம் என்றோம். இருப்பினும், பணயக் கைதிகளுக்கு சில சிக்கல்கள் இருப்பதால் 70 பணயக் கைதிகளை விடுவிக்கச் சம்மதித்துள்ளோம்.
எனினும் இஸ்ரேல் 100 பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |