கொக்குத்தொடுவாய் போல் செம்மணியும் பூசி மெழுகப்படுகின்றதா..! எழும் குற்றச்சாட்டு
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமானது மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழிகளைப் போன்று பூசி மெழுகப்பட்டு, கைவிடப்பட்ட ஒரு விவகாரமாக மாறிவிடுமோ என்ற ஆழமான அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரம் சரியான திசையை நோக்கிப் பயணிக்க வேண்டுமெனில் சர்வதேசக் கண்காணிப்பு கட்டாயம் அவசியமானது என்று வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(27.10.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசக் கண்காணிப்பு வேண்டும்
மேலும் தெரிவித்ததாவது, "ஏற்கனவே இந்தச் செம்மணி புதைகுழி விவகாரம் சம்பந்தமாக, இது சரியான பாதையில் முன்னெடுக்கப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் அனைவர் மத்தியிலும் இருக்கின்றது.

ஏனென்றால், மன்னார் புதைகுழி விவகாரமோ அல்லது முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி விவகாரமோ - இப்படி அனைத்துப் புதைகுழி விவகாரங்களுமே இறுதியில் கைவிடப்பட்ட விடங்களாகவே போய்விட்டன.
இப்போது வந்துள்ள செம்மணிப் புதைகுழி அறிக்கையும் அதேபோன்று பூசி மெழுகப்படலாம் என்றே தோன்றுகின்றது. இந்த அரசும் முன்னர் இருந்த அரசுகள் கையாண்ட முறைகளையே பின்பற்றப் போகின்றது என்ற அச்சம் இந்த அறிக்கையின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தேசங்கள் மற்றும் உள்நாட்டில் நிலவும் சந்தேகங்கள் குறித்துத் தெரிவித்த அவர், "இங்கேயும் சரி, புலம்பெயர்ந்த தேசங்களிலும் சரி, தற்போதைய இந்த அறிக்கை செம்மணி விவகாரம் சரியான திசை நோக்கி நகராது என்ற கடுமையான அச்சத்தையே கொடுத்திருக்கின்றது.
ஆகவேதான் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றோம், செம்மணிப் புதைகுழி விவகாரத்துக்குத் தெளிவான நீதி கிடைக்கவேண்டுமாயின், இதற்கு நிச்சயமாக சர்வதேசக் கண்காணிப்பு வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.