இலங்கை இருளில் மூழ்குவதன் பின்னணியில் நடக்கும் சதி அம்பலம்
ஊழல் நிறைந்த சமகால அரச துறைக்குள் பல்வேறு மாபியாக்கள் செயற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
இலங்கையில் அமுலாகும் மின்சார துண்டிப்பின் பின்னணியில் இவ்வாறான குழுக்கள் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களின் நீர் வெளியேற்றம்
அண்மையில் ரந்தெனிகல, ரந்தம்பே நீர்த்தேக்கங்களின் நீரை மின் உற்பத்திக்காக பயன்படுத்தாது அதனை சட்டவிரோதமான முறையில் வெளியேற்றியதன் பின்னணியில் மாபியா குழுக்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான இரண்டு நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளார்கள்.
கடந்த 8ம் திகதி பகல் 12.00 மணி முதல் 9ம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை இந்த நீர்த்தேக்கங்களின் நீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது.
162 மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்ன?
இந்தக் காலப்பகுதியில் தனியார் நிலக்கரி மின்நிலையங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 162 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
நீரை வெளியேற்றி தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கை மின்சார சபையின் அதிகாரிகளின் தேவைக்கமைய இடம்பெற்றதா? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.