நீர்த்தேக்கங்களிலிருந்து முறைகேடாக நீர்வெளியேற்றம் - பொலிஸ் விசாரணை ஆரம்பம்
விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து முறைகேடாக நீர் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுமார் இரண்டு மணிநேரம் வெளியேற்றப்பட்ட நீர்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர் மின் உற்பத்தி நிலையங்களான விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து மின் உற்பத்தி இயந்திரங்களுக்குள் செலுத்தப்படாத நிலையில் சுமார் இரண்டு மணிநேரம் நீர் வெளியேற்றப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதாயின் அதற்கான செயலகத்தின் அனுமதி முன்கூட்டியே பெறப்பட வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால் கடந்த நாட்களில் நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்வெளியேற்றப்பட்டபோது அவ்வாறான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்று தெரவிக்கப்படுகின்றது.
கஞ்சன விஜேசேகரவின் குற்றச்சாட்டு
மின்சார உற்பத்தியில் தடங்கல் ஏற்படுத்தும் வகையில் குழப்பவாதிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
அதன் அடிப்படையில் தற்போது இரண்டு பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நீர்த்தேக்கங்களை பார்வையிட்டு அதன் பின்னர் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.