சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மாற்றம் - உலக வங்கி வெளியிட்டுள்ள தகவல்
உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் உள்ளதென உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் அறிக்கைக்கமைய, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதலாவது நாடாக லெபனான் பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் சிம்பாப்வே, வெனிசுலா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.
உணவு விலையேற்றம்
மேற்குறித்த நாடுகள் உணவுப் பிரிவில் பணவீக்கத்தின் அடிப்படையில் இலங்கையை விட உயர்ந்த இடத்தில் உள்ளன.
இதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கமைய, கடந்த ஜுலை மாதம் இலங்கை பணவீக்கம் 66.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாத பணவீக்க விகிதத்துடன் ஒப்பிடுகையில் இது 7.8 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் 75.8 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜுலை மாதம் 82.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க நிபுணரின் கணிப்பு
எப்படியிருப்பினும் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹொங்கின் பணவீக்க சுட்டெண்ணிற்கமைய, உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை சற்று குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போது, சுட்டெண்ணில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. அதற்கமைய, இலங்கையின் தற்போதைய பணவீக்க விகிதம் 104 சதவீதமாக உள்ளது. கடந்த ஜுன் மாதம் பேராசிரியர் ஸ்டீவ் ஹொங்கின் பணவீக்கச் சுட்டெண்ணிற்கமைய, இலங்கை அதிக பணவீக்கம் உள்ள நாடுகளில் 03வது இடத்தில் இருந்தது.