ஜுலை மாத பணவீக்கம் 66.7 வீதமாக உயர்வு
கடந்த ஜுலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 66.7 வீதமாக உயர்வடைந்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டியின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பணவீக்கம் உயர்வு
இந்த ஆண்டின் மே மாதம் 58.9 வீதமாக காணப்பட்ட பணவீக்கம், ஜுலை மாதம் 66.7 வீதமாக உயர்வடைந்துள்ளது.
அனைத்துப் பொருட்களுக்குமான நுகர்வோர் விலைச் சுட்டியானது ஜுன் மாதம் 231.5 வீதமாக காணப்பட்டதாகவும் ஜுலை மாதம் 244.4 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பணவீக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
பணவீக்கம் குறையும் என நம்பிக்கை
இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை கடந்த காலங்களில் மேற்கொண்ட தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான முடிவுகள் காணப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.
அந்த நிலையில் எதிர்காலத்தில் பணவீக்கம் குறையும் என நம்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.