மாகாணசபை தேவையா..! மீள ஆராய வேண்டும் என்கிறார் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன
மாகாணசபை முறைமை நாட்டுக்கு அவசியமா என்பதை மீள் சிந்திக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது, மாகாண சபை முறைமையை அப்படியே கொண்டு செல்வதா? அல்லது அப்படியே முடித்துக் கொள்வதா? அல்லது அதனை முழுமையாக மறுசீரமைப்பு செய்வதா என்பது தொடர்பில் நாடளாவிய ரீதியில் கலந்துரையாடல்களும் மீளாய்வும் இடம்பெற வேண்டியது அவசியம் என முன்னாள் பிரதமரும், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாற்பது வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை இன்றைய அரசியல் சவால்களை எதிர்கொள்கின்றதா என்பதை நாம் ஆராய வேண்டும், மாகாணசபை முறையின்றி கடந்த பல வருடங்களாக நாடு இயங்கி இருக்கின்றது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் நடத்தப்படாமல் தாமதமடைந்து வருகின்ற சூழலில் அது தொடர்பில் தினேஷ் குணவர்தனவின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியாக ஊவா மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னர் இன்னும் மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை. கிட்டத்தட்ட 6, 7 வருடங்களாகத் தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகின்றது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தேர்தல் முறை தொடர்பான சட்ட சிக்கல் காணப்படுவதால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன மாகாண சபைகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அரசைப் பொறுத்தவரையில் அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கின்றது.
மாகாணசபைகள்
அந்தவகையில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
"மாகாண சபை முறைமை கடந்த காலங்களில் பயனற்றதாகவே இருந்துள்ளது. ‘மாகாண சபைகள் இன்றி நாடு பல வருடங்கள் பயணித்திருக்கின்றது. எனவே, இதற்குப் பின்னரும் இந்த மாகாண சபை முறைமை நாட்டுக்குத் தேவையா என்று சிந்திக்க வேண்டும். மாகாண சபை ஊடாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மாறாக இதற்குப் பாரியளவு நிதி செலவிடப்படுகின்றது.
எனவே, மாகாணசபை நாட்டுக்குத் தேவையா என்பது தொடர்பில் மீளச் சிந்திக்க வேண்டிய காலம் மீள உருவாகியிருக்கின்றது. இது தொடர்பில் சகல தரப்பினரும் கலந்துரையாட வேண்டும். தமது யோசனைகளை முன்வைப்பது அவசியம். மாகாண சபை முறைமை தொடர்பாக முழுமையான மீள் சிந்தனை அவசியமாகின்றது. மாகாண சபை முறைமையை அப்படியே கொண்டு செல்வதா? அல்லது அதனை முழுமையாக மாற்றியமைப்பதா? அல்லது அதனை இல்லாமல் செய்வதா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும்." - என்றார்.
மாகாண சபை முறைமையில் கடந்த காலங்களில் பல மாற்றங்களை செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும், அவை கைகூடவில்லை. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.
சிறப்பாக இயங்கும் உள்ளூராட்சிமன்றங்கள்
இந்நிலையில் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், "இன்றைய காலகட்ட சவால்களுக்கு இந்த மாகாண சபை முறைமை பதில் அளிக்கின்றதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாக இயங்குகின்றன. நாட்டின் சகல பகுதிகளுக்குமான அபிவிருத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்கலாம். எனவே, இடையில் மாகாண சபை அவசியமா? என்ற கேள்வி எழுகின்றது. இலங்கையில் மாகாண சபையானது அரசியல்வாதிகளுக்கு நாடாளுமன்றம் செல்வதற்கான ஓர் இடைக்காலமாகவே இருக்கின்றது." - என்றார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபை கொண்டு வரப்பட்டது. எனவே, தற்போது அதனை இல்லாமல் செய்தால் அந்த மக்களுக்கான தீர்வுக் காண ஆரம்பம் இல்லாமல் போய் விடுமே என்று தினேஷ் குணவர்தனவிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் பதிலளிகையில், "கல்வி, சுகாதாரம், முதலீடுகள், விளையாட்டு உள்ளிட்ட விடயங்களில் மாகாண மட்டத்தில் பரந்துபட்ட வகையில் செயற்பட ஒரு பொறிமுறை அவசியம். அதனை நாடாளுமன்ற உறுப்பினர்களே செய்யலாம்.
தற்போது கூட மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே தலைமை தாங்குகின்றனர். எனவே, இதற்கு மாகாண சபை முறைமை தேவையற்றதாகவே நாங்கள் கருதுகின்றோம். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆனால், கடந்த காலங்களில் இதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. வடக்கில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இருந்த காலத்தில் கூட அங்கு மிகப் பெரிய மாற்றங்களோ, அபிவிருத்திகளோ இடம்பெறவில்லை." - என்று சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




