இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் தொடர்பான பல்வேறு முறைகேடுகள் அம்பலம்
கிளிநொச்சி- இரணைமடுக் குளத்தின் கீழ் செயல்பட்டு வரும் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் தொடர்பான பல்வேறு முறைகேடுகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக அம்பலமாகியுள்ளன.
இரணைமடு குளத்தின் கீழ் செயற்பட்டு வரும் கமக்கார அமைப்புக்களின் சம்மேளனமானது கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையான கடந்த 12 ஆண்டுகளாக பெரும் போகம் மற்றும் சிறுபோகத்தில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பல கோடி ரூபா நிதியினை முறைகேடாக பயன்படுத்தியுள்ளமை கன்டறியப்பட்டுள்ளது.
இந்த நிதி முறைகேடுகளுக்கு பின்னால் மாவட்டத்தில் உயர் பதவி நிலை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் தேசிய கணக்காய்வுத் திணைக்கள அதிகாரிகள் கடந்த 07ஆம், 08ஆம் திகதிகளில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினால் விவசாயிகளிடமிருந்து நிதி சேகரிப்புகளுக்கு பயன்படுத்திய பற்றுச் சீட்டு புத்தகங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் என்பற்றை மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் கோவையிடப்பட்டிருந்த இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தில் மகிழங்காடு கமக்கார அமைப்பினது கோவையிடப்பட்டிருந்த ஆவணங்கள்; என்பவற்றை மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தது.
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக ஊழல்களுடன் தொடர்புபட்ட மேலும் பல்வேறு வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெருந்தொகை நிதி
கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ம் திகதி முதல் குறித்த அமைப்பு செயற்படத் தொடங்கியுள்ளதுடன் விவசாயிகளிடமிருந்து பெருந்தொகை நிதிகளையும் அறவிட்டுள்ளனர்.

இதனை பதிவு செய்யும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அன்று கமநல அபிவிருத்தி திணைக்களம் ஊடாக விண்ணப்பித்த நிலையில் அன்றைய தினத்தில் அதாவது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அவ் அமைப்பின் உப சட்ட விதிகளை (யாப்பு ) அப்போதைய பிரதி ஆணையாளர் அவர்களால் அங்கீகரிக்கப்படாது.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுமதி பெறப்படாமல் DAD /24/F.F/03 என்ற பதிவு இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஆணையாளர் நாயகத்தின் 7/5/2/1/1 இலக்க சுற்று நிருபத்திற்கு அமைய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள பெரிய நீர்ப்பாசன குளத்திற்குரிய கமக்கார அமைப்பொன்றுக்கு D.I என்ற பதிவு இலக்கத்துடன் பதிவு செய்ய வேண்டிய பதிவு இலக்கத்துக்கு பதிலாக கமநல அபிவிருத்திணைக்களத்தின் கீழ் உள்ள சிறிய அமைப்புகளுக்கு வழங்கப்படுகின்ற DA என்ற பதிவு இலக்கம் ஒன்று வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
மோசடி
அத்துடன் விவசாயிடமிருந்து பெறப்பட்ட பெருந்தொகையான நிதி வங்கிகளில் வைப்பிலிடப்படாமல் திணைக்களத் தலைவர்களில் சிபார்சுகள் இன்றி தனிப்பட்ட அரசியல் செயற்பாடுகளுக்கும் தனிநபர் செயற்பாடுகளுக்கும் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளமை என்பன அவர்களால் இறுதியாக வெளியிடப்பட்ட கணக்கறிக்கைகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளுக்கு பின்னால் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரும் பதவிகளில் உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகள் பின்புலத்தில் உள்ளதாகவே அறிய முடிகின்றது.
கடந்த 12 ஆண்டுகளாக இவ்வாறு விவசாயிகளிடமிருந்து பெருந்தொகையான நிதிகளை அறவிடுவதற்கு அனுமதிகளை வழங்கிய மாவட்டத்தின் உயர்நிலை அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் இந்த நிதி நடவடிக்கை தொடர்பிலும் அதன் பதிவு தொடர்பிலோ இதுவரை ஆராயப்படாமல் இருந்தது ஒரு மோசடிக்கு வழி வகுக்கின்ற செயற்பாடாகவே அமைந்துள்ளது.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri